search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

    மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    கரூர்:

    கரூர் மாரியம்மன் கோவிலில் வைகாசி உற்சவ விழா கடந்த 8-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் பக்தர்களும் புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7.05 மணியளவில் பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி... என கோஷமிட்டபடியே அம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    வீதிகளில் தேர் வலம் வருவதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக நீர் தெளித்து கோலமிட்டு வரவேற்றனர். மேலும் தாம்பூலக் கூடையில் வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். கோவில் அருகே இருந்து புறப்பட்ட தேர், வாங்கல் சாலை, ஆலமரத்தெரு, ஜவகர் பஜார் உள்ளிட்ட தெரு வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.

    இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் முதல் நாளை (புதன்கிழமை) வரை பக்தர்கள் விரதம் இருந்து வந்து மாவிளக்கு, பால் குடம் எடுத்து வந்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அந்தவகையில் ஏராளமான பக்தர்கள் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இருந்து புனித நீராடி பால்குடம் எடுத்தும், அலகு குத்தி கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்து வந்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக் கடனை அம்மனுக்கு பயபக்தியுடன் செலுத்தினர்.

    தேரோட்டத்தையொட்டி ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நீர்மோர், கம்மங்கூழ், பானகம் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன. திருத்தேரோ ட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணித்தனர். நேற்று இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடு தல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
    Next Story
    ×