search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பைக் திருட்டு அதிகரிப்பு

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பைக் திருட்டு அதிகரித்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

    மேலும் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் பைக் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    அவசர கதியாக வருபவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு பதற்றத்துடன் உள்ளே செல்லும் நிலைமை உள்ளது.இதனை பயன்படுத்திக் கொண்டு பைக் திருட்டு நடக்கிறது.

    கடந்த சில மாதங்களாக பார்க்கிங் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பிரசவ வார்டு பகுதியில் அதிகளவில் பைக் திருடு போகின்றன.

    மாதம்தோறும் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக வாகன உரிமையாளர்கள்  போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேரமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கேமராக்கள் செயல்படுவது இல்லை. இதனை நோட்டமிடும் திருடர்கள் எளிதாக இருசக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது:-

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில்  ஏராளமான பைக் திருட்டு போகும் சம்பவம் நடந்து வருகிறது. 

    கடந்த மாதம் வாலாஜாவை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் பைக் திருடியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்  பைக் திருட்டு நடந்து வருகிறது.

    திருடர்கள் முக கவசம் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் திருட்டு சம்பவத்தை தடுக்க பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறை கொண்டு வர வேண்டும்.  

    மேலும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரி பார்க்க வேண்டும். அப்போது தான் பைக் திருட்டை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×