search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.ஜி. அஸ்ரா கார்க்
    X
    ஐ.ஜி. அஸ்ரா கார்க்

    மதுரை உள்பட 10 மாவட்டங்களில் 5 மாதங்களில் 438 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    5 மாதங்களில் 438 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    மதுரை
      
    மதுரை  உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே 20-ந் தேதி வரை குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் பிரத்தியேக பட்டியலை ஐ.ஜி. அஸ்ரா கார்க் இன்று காலை வெளியிட்டார். 

    அதன்படி ‘தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 438 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 90 பேர் கஞ்சா வழக்கிலும், 40 பேர் போக்சோ வழக்கிலும் தொடர்புடையவர்கள். இதுதவிர 270 பேர் திருட்டு, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் தொடர்பு உடையவர்கள்’ என்பது தெரியவந்து உள்ளது.

    மதுரை மண்டலத்தில் குண்டர் சட்ட நடவடிக்கை  தொடர்பாக ஐ.ஜி அஸ்ராகார்க் மாலைமலர் நிருபருக்கு அளித்த  பேட்டியில் கூறியதாவது:

    மதுரை மண்டலத்தில் ஜாதி மோதல், பழிக்கு பழி படுகொலைகள், கஞ்சா விற்பனை ஆகிய சமூக விரோத குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    சட்டம்- ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போலீசார் அமைதியை உருவாக்கும் பணிகளிலும ஈடுபட்டு வருகின்றனர். பழிக்குப்பழியாக கொலைகள் நடக்கும் பகுதியில், சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் அழைத்துப் பேசி, மேலும் சம்பவங்கள் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஜெயிலுக்குப் போவது, திரும்பி வந்து தொழில் செய்வது என்று  கஞ்சா விற்பனை குடிசை தொழிலாகவே நடந்து வருகிறது. எனவே கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவது மட்டுமின்றி, அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களில் தீண்டாமை வன்கொடுமைகள், கந்துவட்டி புகார்கள், ரவுடி அட்டகாசம், சாதிய மோதல் மற்றும் ஆதாய கொலை, கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    மணல் கடத்தல், குட்கா போதைப்பொருள் மற்றும் கள்ள லாட்டரி விற்பனை, சிறுநீரக வர்த்தக மோசடி, உடல் உறுப்பு ஒட்டுதல் மோசடி, பெண் சிசுக்கொலை, கொத்தடிமை, நிலஅபகரிப்பு,  இரட்டைக் குவளை முறை மற்றும் பாலியல் வழக்குகளில் குற்றவாளிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தென்மண்டலத்தில் சமூக விரோதிகள், சாதி அமைப்பினருடன் தொடர்பு வைத்து உள்ள போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மற்றும் பழிக்கு பழியாக கொலைகள் தொடர்பாக முன்கூட்டியே தகவல் வந்தால், அதன் மீது போலீசார்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .போலீஸ் விசாரணை என்பது நியாயமாக இருக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். வேண்டுமென்றே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிக்கக் கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நான் ஏற்கனவே மதுரை, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்து உள்ளேன். இங்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும்  நன்றாக தெரியும். மதுரை உள்ளிட்ட தென் மண்டலங்களில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க அவர்கள் எவராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பாராமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×