search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கும்படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
    X
    பறக்கும்படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    கோவை மாவட்டத்தில் 149 மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு

    தேர்வுகளை புகார்களின்றி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோவை:
      
    தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வினை 41,811 மாணவர்கள் எழுதுகின்றனர்.  இத்தேர்வு வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. 
     
    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மொழி பாடத்திற்கான தேர்வு நடந்தது. இத்தேர்வினை கோவை வருவாய் மாவட்டத்தில் பள்ளிகளின் மூலமாக 149 மையங்களின் மூலம் 41 ஆயிரத்து 811 மாணவ, மாணவிகளும், 6 மையங்களில் தனித்தேர்வர்களாக 2,917 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். 

    தேர்வு பணியில் 3,800 பேர் ஈடுபட்டனர். தேர்வுகளை புகார்களின்றி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 10 மணிக்கு தேர்வு தொடங்கும் என்றாலும் காலை 8.30 மணிக்கு மாணவ - மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதும் மையத்துக்கு வந்து விட்டனர். சில பள்ளிகளில் மாணவர்கள் நன்றாக தேர்வு எழுத பிரார்த்தனை செய்யப்பட்டது.
     
    மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுதுவதற்காக ஆசிரியர்கள் ஆசிவழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தங்களின் பெற்றோர் கால்களில் விழுந்து ஆசிபெற்று தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு மையத்துக்குள் 9.45 மணிக்கு பின்னர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் மாணவ-மாணவிகள் வெளியே காத்திருந்தனர். பின்னர் 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டதும், மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு எண் வரிசைபடி அமர்ந்து தேர்வு எழுத காத்திருந்தனர். 

    9.55 மணிக்கு 2-வது மணி அடிக்கப்பட்டதும் மாணவ - மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதை படித்து பார்க்க 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களுக்கு விடைகள் எழுத தாள்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு மாணவர்கள் விறுவிறுப்பாக தேர்வு எழுத தொடங்கினார்கள். 
     
    பின்னர் பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிந்ததால் தேர்வு எழுதிய மாணவர்கள் சந்தோஷத்துடன் வெளியே வந்தனர். முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையத்தின் வெளியே உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதுடன், கிருமி நாசினி வழங்கப்பட்டது. 

    தேர்வு எழுத சென்ற அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததால் அனைத்து மாணவ-மாணவிகளும் முகக் கவசம் அணிந்தபடியே வந்து இருந்தனர். 

    மேலும் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 

    Next Story
    ×