search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல் முருகன் - ஜிகே வாசன்
    X
    எல் முருகன் - ஜிகே வாசன்

    மின்சாரம் தாக்கி 11 பேர் பலி- அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

    தேர் விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தஞ்சையில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி எல்.முருகன்:- தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- தமிழக அரசு, தேர் திருவிழாவிற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, பக்தர்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணி என்ன என்பதற்கு உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுபோன்ற ஒரு விபத்து இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் மின்சாரம் செல்லும் பாதைகள், மின் வழித்தடங்கள் உள்ளிட்ட பலவற்றை முறையாக பார்வையிட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- தஞ்சாவூர் அருகில் களிமேடு அப்பர்சாமி திருமடத்தின் தேர்த் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து, 11 பேர் இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்துகின்றது.

    எனவே, இன்றைய நிகழ்வை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கேடுகள் நேராத வண்ணம், தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- தேர் திருவிழாவில் மின் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூபாய் 10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதோடு, விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சையும், தகுந்த நிவாரணமும் அளிக்க வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- தேரோட்டத்தில் நடந்த விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சோகம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

    இத்தகைய விபத்துகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், உள்ளூர் நிர்வாகமும், விழாக்குழுவினரும் மேற்கொள்ள வேண்டும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:- களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 15 பேருக்கும் சிறப்பான மருத்துவம் அளித்து, அவர்களின் உயிர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்:- களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. இதுபோன்ற கூடுகைகளில் விழா ஏற்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியோர் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:- தஞ்சாவூர் மாவட்டம் , களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிட பிரார்த்திக்கிறேன். இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்த அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்திட வேண்டுமென மாநிலக்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:- தஞ்சை மாவட்டம் களிமேடு அப்பர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பத்தில் உரசியதால் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த மீளமுடியாத துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையையும் வருத்தமும் அடைந்தேன்.

    தமிழக அரசு தேர் திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோவில்களில் முன்பாகவே ஒரு பாதுகாப்பு குழு அமைத்து முறையான பாதையில் பயணிப்பதை உறுதி செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க ஆவண செய்ய வேண்டும்.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா:- தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற அப்பர் குருபூஜை தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:- மின்சார விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும், சிறுவர்களை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் சிக்கி படுகாயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- களிமேடு கிராமத்தில் நடைபெற்ற இத்துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாயும், தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருபவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளார்கள்.
    Next Story
    ×