search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில்  வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர
    X
    வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர

    வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நாளுக்கு நாள் ரேசன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 டன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
     
    இந்த நிலையில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர், கேத்தாண்டப்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையும், உணவு பாதுகாப்புத் துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அரிசி கடத்தல் குறைந்ததாக தெரியவில்லை.

     நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைத்த தகவலின் பேரில்,  வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் இருந்து  வெளி மாநிலங்களுக்கு கடத்த சாப்ஜி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தனர். 

    இதனை ‌வாணியம்பாடி தாலுகா போலீசாருடன், குடிமை பொருள் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. 

    ரேசன் அரிசி‌ மூட்டைகளை பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் கிராமத்தில் குறவர் வட்டம் பகுதியில் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

     தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் பறக்கும் படை தனிவட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட திரியாலம் கிராமம் குறவர் வட்டம் பகுதிக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனை மேற் கொண்டனர். 

    அப்போது அங்குள்ள ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.  இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் அடுத்த குனிச்சியிலுள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×