search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வயலூர் முருகன் கோவிலில் புதிய அர்ச்சகர்கள் பூஜை

    வயலூர் முருகன் கோவிலில் புதிய அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.
    திருச்சி :

    திருச்சி அருகே உள்ள குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமாரர் முருகன் பிரதான தெய்வமாக இருந்தாலும் அவருடன் சேர்ந்து ஆதிநாதர், ஆதிநாயகி, பொய்யாக் கணபதி, முத்துக்குமாரர் ஆகிய சன்னதிகள் உள்ளன, இதுவரை இக்கோவிலில் பரம்பரையாக 5 அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்து வந்தனர்.

    இவர்களின் இரண்டு பேர் இந்து அறநிலையத் துறையால் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் ஆவர். ஒருவர் தினக்கூலி அடிப்படையிலும், ராம் பிரபு மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும்  12 வருடங்களாக சம்பளம் ஏதும் வாங்காமல் பணி நிரந்தரமாகும் என்ற கனவில் அர்ச்சகராக பணியாற்றி  வந்தனர்.

    தற்போது அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஜெயபாலன் மற்றும் பிரபு என்ற இரு வரை இந்து அறநிலை துறை சார்பில் அர்ச்சகர்களாக நியமித்து  அவர்கள் முருகன் சன்னதி வரை சென்று அர்ச்சனை செய்யலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

    இந்த இருவரும் நேற்று கோவிலுக்கு வந்தனர். அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்ற பின்பு அவர்கள் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்ய முற்பட்டனர். அப்போது ஏற்கனவே பணியில் இருந்த அர்ச்சகர்கள் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வயலூர் கோவிலில் குவிந்தனர். மேலும் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார்  குவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே தகவலறிந்த இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஸ்ரீரங்கம் ஆய்வாளர் மற்றும் வயலூர் செயல்அலுவலர் அருண்பாண்டியன் மற்றும் அருகில் உள்ள கோவில் செயல் அலுவலர்கள் வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் அனைவரும் அர்ச்சகரா கலாம் என்ற அரசின் விதிப்படி நியமிக்கப்பட்ட இருவரும் சென்று முருகன் சன்னதியில் அர்ச்சனை செய்தனர். ஏற்கனவே இருந்த பரம்பரை அர்ச்சகர்கள் உள்ளே செல்லாமல் வெளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே பணியாற்றிய ராம்குமார், கார்த்திக் ஆகிய இருவரும் வழக்கம்போல் பணி செய்யலாம் என்று உறுதி அளித்ததன் பேரில் பரம்பரை அர்ச்சகர்கள் வழக்கம் போல் கோவில் பணியில் ஈடுபட்டனர். இதனால் வயலூர் முருகன் கோவிலில் 2 நாட்களாக ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.
    Next Story
    ×