search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தண்ணீர் தட்டுப்பாடு- கட்டணம் உயர்வால் தவிக்கும் பொதுமக்கள்

    திருமுருகன்பூண்டிக்கான குடிநீர் வினியோகம் என்பது, கடந்த 15 ஆண்டுக்கு முன் வடிவமைக்கப்பட்டது.
    அவிநாசி:

    இரண்டாம் நிலை நகராட்சி அந்தஸ்து பெற்ற திருமுருகன்பூண்டியில்  தற்போதைய நிலவரப்படி மக்கள் தொகை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

    13 ஆயிரத்துக்கும் மேல் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. 

    மக்களுக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தினமும், 7.50 லட்சம் லிட்டர் தண்ணீர், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் தினமும் 8 லட்சம் லிட்டர் என 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப தினசரி குடிநீர் தேவை 50 லட்சம் லிட்டர் என நகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. அதன்படி குடிநீர் பற்றாக்குறை என்பது, தினசரி 35 லட்சம் லிட்டர். தற்போது நகராட்சி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில் தினமும் ஒரு நபருக்கு, 140 லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். குறைந்தபட்சம் 30 லட்சம் லிட்டர் தண்ணீருக்காவது, வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், 

    திருமுருகன்பூண்டிக்கான குடிநீர் வினியோகம் என்பது, கடந்த 15 ஆண்டுக்கு முன் வடிவமைக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகையை காட்டிலும், தற்போது, மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. தற்போது புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தினமும் 14 லட்சம் லிட்டர் தண்ணீர், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தினமும் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற வேண்டும்.

    இதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நகர மன்றத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து பேசி, கூடுதலாக தண்ணீர் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். 

    இதுதவிர நகராட்சி சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் வினியோகிக்கலாம். இந்த ஏற்பாடுகள் கை கூடினால் குறைந்தபட்சம், 5 நாளுக்கு ஒருமுறையாவது தண்ணீர் வினியோகிக்க முடியும். அத்துடன் ராக்கியாபாளையம், அம்மாபாளையம் பகுதியில்  திருப்பூர் மாநகராட்சிக்கு, ‘அம்ரூத்’ திட்டத்தில், மெகா குடிநீர் திட்டப்பணி நடந்து வருகிறது. 

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை மையமாக வைத்து மாநகராட்சிக்கான நான்காவது குடிநீர் திட்டப்பணியும் நடந்து வருகிறது.

    இந்த திட்டங்களில் பதிக்கப்படும் குழாய்கள், பூண்டி நகராட்சி எல்லையை கடந்தே செல்வதால் இத்திட்டங்களில் இருந்து தினசரி குறைந்தபட்ச அளவு தண்ணீரையாவது, பூண்டி நகராட்சிக்கு பெறும் வகையிலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். 

    அத்துடன் நகராட்சி அந்தஸ்து பெற்றுவிட்ட நிலையில் பூண்டி நகராட்சிக்கென, பிரத்யேகமாக புதிய குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

    நகராட்சி தலைவர் குமார் கூறுகையில், 

    நகராட்சியில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரச்சினையை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். 

    மாவட்ட நிர்வாகம் , அரசின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்லவுள்ளோம் என்றார். அவிநாசி பேரூராட்சியில் குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவிநாசி பேரூராட்சியில் 8,000 வீட்டு குடிநீர் இணைப்புகள் , 470 வணிக குடிநீர் இணைப்புகள் உள்ளன.

    வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு  குடிநீர் கட்டணமாக கடந்த 2018 மார்ச் வரை மாதம் 55 ரூபாய், வணிக இணைப்புகளுக்கு 110 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பேரூராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ஆயிரம் லிட்டருக்கு 3.50 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.

    கடந்த 2018-ல் குடிநீர் வடிகால் வாரியம் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. 

    இதனால் உள்ளாட்சி நிர்வாகங்களிடம் இருந்து வசூலித்து வந்த குடிநீர் கட்டண தொகையை தடாலடியாக உயர்த்தியது. அதன்படி ஆயிரம் லிட்டருக்கு 9.50 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தியது. 

    இதனால் பேரூராட்சி சார்பிலும் குடிநீர் கட்டணமாக வீடுகளுக்கு மாதந்தோறும் 151 ரூபாய், வணிக பயன்பாட்டு இணைப்புகளுக்கு 302 ரூபாய் என கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டது. 

    குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 11.50 ரூபாய் பேரூராட்சியிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.பேரூராட்சி சார்பில் குடிநீர் வினியோகத்துக்கான கட்டணமாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாதந்தோறும் 12 முதல் 14 லட்சம் ரூபாய் வரை செலுத்தப்படுகிறது.

    இதுதவிர மின் கட்டணம், குடிநீர் பணியாளர்களுக்கான சம்பளம் குடிநீர் குழாய் பழுதுநீக்கும் செலவு உள்ளிட்ட செலவினங்கள் என மாதந்தோறும் 20 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. 

    இதில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணம் மூலம் மாதம் 13.50 லட்சம் ரூபாய் வரை வசூலாகிறது. ஆக, வரவுக்கு மீறிய செலவு தான்’ என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

    இந்நிலையில் ‘குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்‘ என அவிநாசி பகுதியை சேர்ந்த பொதுநல அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

    இதுகுறித்து பேரூராட்சி தலைவர் தனலட்சுமி கூறுகையில்,

    குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு சங்கம், அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனு வழங்கியுள்ளனர். மன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றார்.
    Next Story
    ×