search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைகள்
    X
    நகைகள்

    மளிகை வியாபாரியிடம் 264 பவுன் நகை கொள்ளை: சுங்கசாவடி-ஓட்டல் கண்காணிப்பு கேமிரா மூலம் தீவிர விசாரணை

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படுவதில்லை. இதுவும் திருடர்கள் கைவரிசை காட்ட வசதியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    திருநாவலூர்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள். தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி மளிகைகடை நடத்தி வருகிறார்.

    இவர் விளாத்திகுளத்தில் நடைபெற உள்ள திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் டெம்போ டிராவலர் வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது மகன் பெரியசாமி, மனைவி சித்ரா உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.

    ஊருக்கு புறப்படும்போது நகை உள்பட முக்கிய பொருட்களை அட்டைபெட்டிகளில் கட்டி வேனின் மேல் பகுதியில் வைத்து சென்றுள்ளனர். ஊருக்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சுங்கசாவடி மைய பகுதியில் வேனை நிறுத்தி பொருட்கள் சரியாக உள்ளனவா? என்று பார்த்தனர்.

    பின்னர் தியாகதுருகம் கூட்டுரோடு சின்னக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு டீக்கடையில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் டீ குடித்தனர். அப்போது பார்த்தபோது வேனின் மேல் இருந்த ஒரு அட்டைபெட்டி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த அட்டைபெட்டியில் 264 பவுன் தங்க நகைகள் இருந்ததது. அதிர்ச்சியடைந்த தங்கபெருமாள் இதுகுறித்து திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, தனிப்பிரிவு ஏட்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சுங்கச்சாவடி மற்றும் டீக்கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வேனின் மேல் இருந்த அட்டைபெட்டியை யாராவது திருடி சென்றனரா? அல்லது வழியில் அந்த பெட்டி தவறி விழுந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வேனை ஓட்டிவந்த செங்கல்பட்டை சேர்ந்த டிரைவர் பாண்டியிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    264 பவுன் நகை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படுவதில்லை. இதுவும் திருடர்கள் கைவரிசை காட்ட வசதியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


    Next Story
    ×