search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளின் தற்போதைய நிலை.
    X
    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளின் தற்போதைய நிலை.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டிய பயனாளிகள் தவிப்பு

    தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டிய கழிப்பறைகள் சேதமடைந்ததால் பயனாளிகள் வேதனை
    மேலசொக்கநாதபுரம்:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாத நிலையை உருவாக்க கழிவறை உள்ள வீடுகள், இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து சுவச் பாரத் அபியான் என்ற திட்டத்தின் கீழ் கழிவறை இல்லாத வீடுகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு 70 சதவீத பங்களிப்பிலும் மாநில அரசு 30 சதவீத பங்களிப்பிலும்  ரூ.12,000 மதிப்பிலான தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் குடியிருப்புகளில் 75593 குடியிருப்புகளில் கழிப்பிடம் இல்லாதவை என கண்டறியப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 63982 ஸ்விட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் 90 சதவீதம் தனிநபர் கழிப்பிடம் பயன்பாடு இன்றி சிதிலமடைந்த நிலையிலும் பழைய பொருட்களை வைத்திருக்கும் உபயோகம் அற்ற நிலையில் உள்ளது. 10 சதவீதம் கழிப்பறை பயன்பாடு இன்றி குளியலறை ஆக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இத்திட்டம் பெரும்பாலான பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

    இதனால் இன்னும் திறந்தவெளி கழிப்பிடம் என்பது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் பழைய தனிநபர் கழிப்பிடத்தை வண்ணம் பூசி புதிதாக வைத்துள்ளனர்.

    கழிப்பறையில் கசடு செல்ல வழியில்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அவசரகதியில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி ஒருமுறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் தனிநபர் கழிப்பிடங்கள் உள்ளன.

    கிராமப்புறங்களில்  100 சதவீதம் பழங்கால முறையில் சாலையோரங்களில் வாய்க்கால் வரப்புகளில் ஆற்றுப்படுகைகளை கழிப்பிடமாக தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தூய்மை பற்றிய அறியாமை இல்லாமல் கிராமப்புற மக்கள் பழங்கால முறையில் வாழ்ந்து வருகின்றனர். சாலை ஓரங்களில் பெண்கள் குழந்தைகள் முகம் சுளிக்கும் வகையில் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    எங்கள் காலம் தான் இப்படி ஆகிவிட்டது எதிர்காலத்தில் இதுபோன்று வாழ வேண்டாம் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அரசு அதிகாரிகள் துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    அவ்வாறு இல்லாத கழிப்பறைகளை சீரமைப்பு செய்து அதனை மக்கள் பயன்படுத்த எடுத்துரைக்க வேண்டும். இல்லையெனில் எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டதோ? அது மக்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும்.
    Next Story
    ×