search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவாரூர், நாகை மாவட்டங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

    திருவாரூர், நாகை மாவட்டங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    திருவாரூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 

    வாக்குப்பதிவு மாலை வரை அமைதியாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்தது. 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் உள்ள 216 கவுன்சிலர்களில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் 215 கவுன்சிலர் பதவிகளுக்கு 848 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக 282 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 37 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 30 வார்டுகளுக்கு 57 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான திருவாரூர் ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    அதுபோல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 68.25 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    நாகை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 184 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

    நாகை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
    நாகை மாவட்டத்தில் 69.19% சதவீத வாக்குகள் பதிவானது. நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பில் போலீசார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×