search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடியில் எந்திர பழுது காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்
    X
    வாக்குச்சாவடியில் எந்திர பழுது காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

    நெல்லை மாவட்டத்தில் எந்திர கோளாறால் 4 இடங்களில் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தலையொட்டி 4 இடங்களில் எந்திர கோளாறு ஏற்பட்டது. உடனே அங்கு பழுது சரிபார்க்கப்பட்டு ஓட்டுப்பதிவு மீண்டும் தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 2-ம் வார்டில் பெண்களுக்கென தனியாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.  அங்கு 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

    இந்நிலையில் திடீரென அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. உடனடியாக தேர்தல் அலுவலர்களும், பேரூராட்சி ஊழியர்களும் பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    45 நிமிடங்களுக்கு பின்னர் எந்திரம் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. பணகுடி பேரூராட்சி 10-வது வார்டில் வாக்கு மையத்துக்கு வேட்பாளர்களின் முகவர்கள் வராததால் ஓட்டுப்பதிவு தாமதமானது. சுமார் 1 மணி நேரம் காத்து நின்ற பிறகு ஆண் வாக்காளர்கள் வாக்களித்து விட்டு சென்றனர்.

     பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் ஓட்டு எந்திரத்தில் வரும் ‘பீப்’ சத்தம் வரவில்லை என புகார் எழுந்தது. 


    இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு எந்திரத்தை பழுதுபார்க்கும் பணி நடந்தது. சிறிது நேரத்துக்கு பின் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    தென்காசியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை என கூறி திடீரென அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    நெல்லை மாநகராட்சி 32-வது வார்டு முருகன்குறிச்சி அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை 17 பேர் வாக்களித்த நிலையில் திடீரென எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 

    பின்னர் மண்டல அலுவலர் கள் விரைந்து வந்து மாற்று எந்திரத்தை பொருத்தினர். இதைத் தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு எந்திரத்துக்கு செல்லும் மின் வயரில் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

    முருகன்குறிச்சி அடைக்கலாபுரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திர பட்டன் வேலை செய்யாததால் மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    சந்திப்பு ம.தி.தா. இந்து பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் முதியவர்கள் பள்ளி உள்ளே வரை வாகனங்களில் செல்ல அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் உள்ள எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு தாமதமானது. 

    தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி பழுதை சரிசெய்த பின்னர் 30 நிமிடம் தாமதமாக 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    சாத்தான்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 10-வது வார்டுக்குட்பட்ட ஒரு பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்கு ச்சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 

    பின்னர் அது சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×