search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாத்துகுஞ்சுகளை கால்நடையாக அழைத்து செல்லும் வியாபாரி
    X
    வாத்துகுஞ்சுகளை கால்நடையாக அழைத்து செல்லும் வியாபாரி

    தஞ்சையில் வாத்து குஞ்சுகள் விற்பனை ‘ஜோர்’

    புழுக்களை உண்டு பயிர் வளர உதவுவதால் தஞ்சையில் வாத்து குஞ்சுகள் ஒரு ஜோடி ரூ.120&க்கு விற்பனையாகிறது.
    தஞ்சாவூர்:

    வாத்துகளில், பெருவாத்து, சிறுவாத்து என பலவகை உள்ளன. வாத்துகள், நல்ல நீரிலும், கடல் நீரிலும் வாழக்கூடியவை.பெரும்பாலான வாத்து வகைகளில், அதன் அலகு அகண்டு தட்டையாகவும், இரையை தோண்டி எடுப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். வாத்துகள் பல்வேறுபட்ட உணவை எடுத்துக்கொள்பவை. புற்கள், நீர் தாவரங்கள், மீன்கள், புழுக்கள், சிறுநத்தைகள், தவளை போன்ற உயிரிகளை உணவாக உண்கின்றன.

    கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக, வாத்து வளர்ப்பு முக்கிய மானதாக வளர்ந்து வருகிறது. வயல்வெளிகளில் மேய விடுவதால், புழுக்கள், பூச்சிகளை உட்கொண்டு, சாகுபடி செய்த பயிர்கள் நன்றாக வளர்வதற்கு உறுது ணையாக வாத்துகள் உள்ளன.

    தஞ்சை மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் என்பதால் ஏராளமான விவசாயிகள் வாத்துக்குஞ்சுகள் வாங்கி அதனை வளர்த்து வயல்வெளிகளில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதற்காக ஆண்டுதோறும் பருவ காலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வாத்து குஞ்சுகள் தஞ்சை மாவட்டத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணி நடந்து வருவதால் இந்த நேரத்தில் வாத்துக்களை விட்டால் பயிர் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் நன்றாக வளரும்.

    இதற்காக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் தஞ்சையில் முகாமிட்டு வாத்து குஞ்சுகள் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து தர்மபுரி மாவட்டம் காளேக்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த சித்தப்பன் கூறும்போது:

    வாத்து குஞ்சுகள் ஒரு ஜோடி ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழில் என்பதால் வாத்து தேவை அதிகமாக இருக்கும். தர்மபுரியில் இருந்து வாத்து குஞ்சுகளை லாரியில் எடுத்து தஞ்சைக்கு கொண்டு வருகிறோம். 

    பின்னர் வாத்து குஞ்சுகளை கால்நடையாக மேய்த்து கொண்டு தஞ்சையில் உள்ள மார்க்கெட், விவசாய விளைநிலங்கள் உள்ளிட்ட விவசாயிகள் அதிகம் இருக்க கூடிய பகுதிகளுக்கு செல்கிறோம். இந்த வகை குஞ்சுகளை விவசாயிகள் வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    3 மாதத்தில் குஞ்சுகள் வளர்ந்து வாத்துக்களாக மாறிவிடும். 6 மாதத்துக்கு பிறகு முட்டை இட தொடங்கி விடும். தோட்டங்கள் மற்றும் தோட்டத்து சாலைகளில் இவ்வகையான வாத்துகளை வளர்க்கலாம். புழுக்களை உட்கொண்டு, பயிர்கள் நன்றாக வளர இவை உதவுவதால், பலரும் விலைக்கு வாங்கிச்செல்கின்றனர்,’’ என்றார்.
    Next Story
    ×