search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதார மையம் கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.
    X
    சுகாதார மையம் கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.5கோடி மதிப்பில் சுகாதார மையங்கள் கட்டும் பணி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நான்கு முதற்கட்ட பரிசோதனை மையங்கள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி  மண்டலம் 3, வார்டு 36 அம்மன் நகர் பகுதியில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்  தலைமையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் முன்னிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ரூ.5 கோடி மதிப்பீட்டில் 20 இடங்களில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் தெரிவித்தாவது:

    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நான்கு முதற்கட்ட பரிசோதனை மையங்கள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

    தொடர்ந்து, நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மற்றும் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் தற்காப்பு தடுப்பூசிகள் என அனைத்தும் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. 

    மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர், செவிலியர் கொண்ட இரண்டு குழுக்கள் வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

    மேலும், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி சாலைகள், கழிவு நீர் வசதிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள் போன்றவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதன் தொடர்ச்சியாக இன்று தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 20 இடங்களில் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் அமைப்பதற்கான கட்டிட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, முக கவசம் அணிந்து, கைகளை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை நன்கு கழுவி, சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்றார்.

    மேலும் திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண்டலம் உட்பட்ட பகுதிகளில் பணியாற்ற 10 நபர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 32 நபர்களுக்கு ரூ. 1.6 கோடியில் தொழில் தொடங்க அரசு மானியமாக ரூ. 48 லட்சம் வழங்கினார்.
    Next Story
    ×