search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிய செல்போனில் பழகி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

    10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சென்னை:

    பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதற்காக செல்போன் ஒன்றை மாணவியின் பெற்றோர் வாங்கி கொடுத்திருந்தனர். மாணவி ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை பயன்படுத்தி வந்ததுடன் பல நேரங்களில் செல்போன் செயலிகளில் நேரத்தை கழித்துள்ளார்.

    அப்போது செல்போன் மூலம் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பழக்கம் ஆனார். இருவரும் நேரிலும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் ஆவடி பஸ் நிலையம் அருகே தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வைத்து மாணவியிடம் வாலிபர் எல்லைமீறி நடந்து கொண்டுள்ளார்.

    இதன் காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்தார். ஆனால் வீட்டில் சொல்லாமல் அவர் அதனை மறைத்து வந்தார். இது மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவியோ வாலிபர் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் மறைத்து வருகிறார்.

    இதையடுத்து போலீசாரால் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான வாலிபரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

    இருப்பினும் மகளிர் போலீசார் மாணவியிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். மாணவியின் தோழிகளிடமும் வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆவடி பஸ்நிலையம் அருகே வாலிபர் ஒரு வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்றிருப்பதால் அந்த பகுதியிலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதன்மூலம் வாலிபரை அடையாளம் கண்டு அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி பயன்படுத்திய செல்போனை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவியிடம் செல்போனில் அடிக்கடி பேசிய நபர்கள் யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையில் வாலிபர் யார் என்பது ஓரளவு அடையாளம் தெரிந்துள்ளதாகவும், விரைவில் வாலிபரை கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×