search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்ட்ரல் ரெயில் நிலையம்
    X
    சென்ட்ரல் ரெயில் நிலையம்

    நாளை முழு ஊரடங்கு: சென்ட்ரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளை ஏற்ற ஆட்டோவுக்கு அனுமதி

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது ரெயில்வே அதிகாரிகள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
    சென்னை:

    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும், முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் 10 சதவீதம் பயணிகள், குறிப்பாக விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் டாக்சி மற்றும் ஆட்டோக்கள் கிடைப்பதில் சிரமங்களும், அதிக கட்டணம் செலுத்தியும் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்தன.

    அதன்பேரில், ஊரடங்கு சமயங்களில் ரெயில் சேவைகள் முழுவதுமாக இயக்கப்படுவதால் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில், ரெயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமப்பட்டதாக தெரியவந்தது.

    எனவே, பொதுமக்களின் இச்சிரமத்தை தவிர்க்க, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி.சரத்கர், தலைமையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்தது. தற்போது, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    ஆட்டோ


    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது ரெயில்வே அதிகாரிகள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

    அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் சோதனையின்போது வாகன ஒட்டுனர்கள் பயணிகளின் ரெயில் டிக்கெட்டின் பிரதியை தங்களது கைப்பேசியில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து போக்குவரத்து மற்றும் போலீசாருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அனைத்து சங்கத்தினருக்கும் அளிக்கப்பட்டு, ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஓலா மற்றும் ஊபர் டாக்சிகளின் அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் கூட்டமும் நடத்தப்பட்டு அவர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், ஒட்டுனர்கள் பயணிகளை அவர்கள் இடத்தில் இறக்கிவிட்டு திரும்பி காலியாக வருவதனால் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது குறித்து விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது.

    காவல்துறை உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையினருடன் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×