search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் பிடித்த வங்காநரி
    X
    சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் பிடித்த வங்காநரி

    வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி பிடித்த கிராம மக்கள்- வனத்துறை அபராதம் விதிப்பு

    வாழப்பாடி பகுதியில் வனத்துறை தடையை மீறி வங்காநரி பிடித்ததால், வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனூர், மத்தூர், பெரியகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், மார்கழி மாதத்தில் பயிர்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.

    இதனால், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சென்று, கோவில் வளாகத்தில் ஓட விட்டு பொதுமக்களுக்கு காண்பித்த பிறகு, எருதாட்டம், விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்தநரியை பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. தடைமீறியை வங்காநரி பிடித்தால், கடந்த சில ஆண்டாக வனத்துறை அபராதம் விதித்து வருகிறது. ஆனாலும் இந்த பாரம்பரிய நிகழ்வை கைவிட மனமில்லாத கிராம மக்கள், வங்காநரியை பிடித்து காணும் பொங்கல் தினத்தன்று கிராமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு வந்து மக்களுக்கு காண்பித்து விட்டு, வனத்துறையினரிடம் நரியை ஒப்படைப்பதோடு, அபராதமும் செலுத்தி வருகின்றனர்.

    நிகழாண்டு காணும் பொங்கல் தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், சின்னமநாயக்கன் பாளையம் கிராம மக்கள், நேற்று வங்காநரியை பிடித்தனர். பின்பு அதை மேள வாத்தியம் முழங்க கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்சென்று கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு மீண்டும் பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டனர். இதன்பிறகு, எருதாட்டம், விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்தனர்.

    இருப்பினும், வனத்துறை தடையை மீறி வங்காநரி பிடித்ததால், இதுகுறித்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ‘கிராமப்புற தரிசு நிலங்களில் சுற்றித்திரியும் வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், காணும் பொங்கலன்று மக்களுக்கு காண்பித்து விட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விடும், இந்த பாரம்பரியமிக்க சடங்கு தொடர்வதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். வனத்துறை அபாரதம் விதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×