search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
    X
    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

    காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் சிகிச்சை அளித்ததால் வாலிபர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

    அரசு மருத்துவமனையின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஜெ .நகர் பகுதியை சேர்ந்தவர் கவின் ( வயது 23). இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கவின் அவருடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அரசு மருத்துவமனையின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டிய பின்னர் அரசு மருத்துவமனை ஊழியர் கதவை திறந்துள்ளார். அவரிடம் கவின் தனக்கு நெஞ்சு வலி என கூறியுள்ளார். அரசு மருத்துவமனை ஊழியரும் ஊசி ஒன்றை போட்டுவிட்டு 2 மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளார்.  

    பின்னர் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை எடுக்கும் முன் கவினுக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதுபோல் உள்ளது என கூறிக்கொண்டே வாந்தி எடுத்துள்ளார். கவினின் நண்பர்கள் மீண்டும் மருத்துவமனை கதவை தட்டி ஊழியரை அழைத்து பரிசோதனை செய்துள்ளனர்.

    ஆனால் சிறிது நேரம் கழித்து கவின் இறந்துவிட்டார். இதையடுத்து கவினின் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கவே ஜெ.நகர் பகுதி பொதுமக்கள், உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மேலும் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    தவறான சிகிச்சை, ஊசி செலுத்தியதே கவின் இறப்புக்கு காரணம். எனவே தவறான ஊசி செலுத்திய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கேயம் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

    பொதுமக்கள் கூறுகையில், பல வருடங்களாக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை. மேலும் விபத்து மற்றும் தீவிரசிகிச்சை பிரிவுகள் இருந்தும் இங்கு வரும் நோயாளிகளை ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

    காங்கேயம் பகுதியில் உள்ள தேங்காய் உலர்க்களங்கள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கூலித்தொழிலாளிகள் இந்த மருத்துவமனையையே நம்பி உள்ளனர். இன்று அதிகாலை சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் கவின் உயிரிழந்துள்ளார். எனவே இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    கவினின் தந்தை சேகர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளராகவும் தாய் விமலா கூலித் தொழிலாளியாகவும் பணிபுரிகின்றனர். கவினுக்கு திருமணமாகி ஸ்னேகா (20) என்ற மனைவியும், ஜெகதீஷ் (1) என்ற மகனும் உள்ளனர். கவின் தினக்கூலியாக வர்ணம் பூசும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.
    Next Story
    ×