search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழந்த மாணவர் மணிகண்டன்
    X
    உயிரிழந்த மாணவர் மணிகண்டன்

    காவல்துறை தாக்கியதால் மணிகண்டன் உயிரிழக்கவில்லை: ஏ.டி.ஜி.பி. விளக்கம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறை தாக்கி உயிரிழக்கவில்லை என்பது மறு பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த லட்சுமணக்குமார் மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4-ம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் மணிகண்டன் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்று பிடித்தனர்.

    காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் மணிகண்டனை அனுப்பி வைத்தனர். வீட்டில் நள்ளிரவில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    போலீசார் தாக்கியதில்தான் மணிகண்டன் இறந்ததாக கூறி உறவினர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

    ஏ.டி.ஜி.பி.தாமரை கண்ணன்

    இந்நிலையில் கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன்  விளக்கம் அளித்துள்ளார்.  அப்போது அவர் பேசியதாவது:

    காவல்நிலையத்தில் விசாரித்த பின்னர் தாயார் மற்றும் உறவினரிடம் மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் உள்ளது. 

    மணிகண்டன் பிரேத பரிசோதனை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தடய அறிவியல் நிபுணர்கள் குழு மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.  இதன் மூலம் அவர் காவல்துறையினர் தாக்கி உயிரிழக்கவில்லை. 

    மணிகண்டன் இறப்பு குறித்து சமூக வளைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. அவை நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×