search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியில் 7-வது நாளாக வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்
    X
    தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியில் 7-வது நாளாக வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

    தூத்துக்குடியில் 7-வது நாளாக வடியாத வெள்ளம்

    பலத்த மழையின் காரணமாக விளாத்திகுளம் பகுதிகளில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. எட்டயபுரம் அருகே உள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் கண்மாய்நீர் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    டேங்கர் லாரிகள், 400 மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதனால் முக்கிய இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. எனினும் மாநகராட்சியின் பல இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது.இந்நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மீண்டும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தின் 21.4 மில்லி மீட்டர் பதிவானது.

    அதேபோல் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம், காடல்குடி, வைப்பாறு, சூரங்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கீழ அரசரடி, எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் அனைத்து பகுதியிலும் தண்ணீர் தேங்கி மீண்டும் மோட்டார்களை வைத்து வெளியேற்றும் பணி நடக்கிறது. தொடர்மழை காரணமாக ஒரு வாரமாக முத்தம்மாள் காலனியின் 10 தெருக்களிலும், கதிர்வேல்நகரிலும் முட்டளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்தப்பகுதி தீவு போல காட்சியளிக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட செல்லமுடியாமல் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுளது.

    இதேபோல் ராம்நகர், ரகுமத்நகர், தனசேகரன்நகர், ஆதிபரா சக்திநகர், பிரைண்ட் நகர், சிதம்பரநகர், ராஜூவ் நகர், ராஜகோபால் நகர், நேருநகர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற் குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 400 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதில் 10 வீடுகள் முழுமையாகவும் மற்றவை பகுதியளவும் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரதான வாசலில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் புறநோயாளிகள் செல்ல மாற்றுபாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலன இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

    மழை காரணமாக பெரும்பலான குடியிருப்புகள் மட்டுமின்றி பள்ளிகளும் தண்ணீரில் சூழ்ந்துள்ளதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு இன்று மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்த தண்ணீர் பந்தல் அருகே உள்ள தாம்போதி தரைப்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. 

    எனினும் பேரிடர் மீட்பு துறையின் கண்காணிப்பில் அந்த பாலத்தில் தொடர்ந்து வாகனங்கள் சென்று வருகிறது.

    இன்றும் காலையும் பாலத்தில் 7-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் படகு, கயிறு, மீட்பு வாகனத்துடன் பாலத்தை கண்காணித்து வருகின்றனர்.


    மோட்டார் சைக்கிள், கார்கள் பாலத்தில் தேங்கிய உள்ள தண்ணீரை கடந்து செல்ல வாகன ஓட்டுகளுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் பாலத்தை ஒட்டி உள்ள சாலையில் பாதை தெரிவதற்காக தண்ணீர் செல்லும் பகுதியில் தார் டிரம்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பலத்த மழையின் காரணமாக விளாத்திகுளம் பகுதிகளில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. எட்டயபுரம் அருகே உள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் கண்மாய்நீர் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.


    இதனால் கீழ்நாட்டுகுறிச்சி, மாசார்பட்டி, அயன்ராசாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளன.

    விளாத்திகுளம் அருகே என். ஜெகவீரபும், மாவிலோடை, கழுகசாலபுரம், பொத்த கூடும்பட்டி, சங்கரநாயக்கன் பட்டி, கந்தசாமிபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வெங்காயம், உளுந்து, பாசி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளன.

    Next Story
    ×