search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொடர் மழையிலும் நவீன எந்திரம் மூலம் கொப்பரை உற்பத்தி

    களங்களில் காய வைத்தாலும், ஈரப்பதம், பூஞ்சை மற்றும் வேதி பொருள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
    உடுமலை:

    மழைக்காலத்திலும் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கொப்பரை உற்பத்தி எந்திரத்தில் ஒரே நாளில் தரமான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இரு கலன்களும் தலா 10 ஆயிரம் தேங்காய் என 20 ஆயிரம் தேங்காயிலிருந்து கொப்பரை உற்பத்தி செய்யும் திறன் உடையதாகும். இந்த எந்திரம், தேங்காய் தொட்டி, பண்ணை கழிவுகள் மற்றும் விறகு வாயிலாக வெப்பம் ஏற்றப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வெப்பக்காற்றால் உலர்த்தப்படுகிறது. 

    தேங்காய் நேரடியாக ஒரு கலனில் கொட்டப்பட்டு 8 மணி நேரம் வெப்பக்காற்றால் காயவைக்கப்படுகிறது. பின்னர் அதிலிருந்து எடுத்து தேங்காயில் இருந்து ஓடு பிரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள நவீன எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்கர அமைப்பில் வைத்தால் இரண்டாக பிரித்தும், அதற்கு பின் தேவையான அளவில் துண்டாக்கி தருகிறது. அதனை எடுத்து 16 மணி நேரம் கலனில் வைத்து சூடாக்கப்படுகிறது.

    இந்த நவீன எந்திரம் வாயிலாக 5 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் உள்ள தரமான கொப்பரை உற்பத்தி செய்ய 24 மணி நேரம் மட்டுமே தேவைப்படுகிறது.

    விவசாயிகள்  கூறுகையில், தொடர் கனமழை பெய்தாலும் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள நவீன எந்திரத்தால் தரமான கொப்பரை நல்ல நிறத்தில் உற்பத்தி செய்ய முடிகிறது.

    ‘களங்களில் காய வைத்தாலும், ஈரப்பதம், பூஞ்சை மற்றும் வேதிபொருள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கு இயற்கை முறையில் குறைந்த ஆட்கள் தேவையுடன் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் தேங்காய் கொப்பரையாக மாற்ற முடிகிறது என்றனர். 

    ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர்  கூறுகையில்:

    நவீன முறையில் கொப்பரை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மழை காலத்திலும்  தரமான கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். விவசாயிகள் தங்கள் பண்ணைக் கழிவுகளை கொண்டும், தேங்காய் தொட்டிகளையும் எரிபொருளாக பயன்படுத்தி செலவில்லாமல், உற்பத்தி செய்து வருகின்றனர்.

    விவசாயிகளிடம், நவீன எந்திரத்தில் கொப்பரை உற்பத்தி செய்ய கட்டணம் வசூலிப்பதில்லை. உற்பத்தி செய்த கொப்பரை ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக விற்பனை செய்யும் வசதியும், போதிய விலை கிடைக்கவில்லை என்றால் இருப்பு வைத்து விற்பனை செய்து கொள்ளும் வகையில் குடோன்களும் உள்ளன.

    விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம்  வரை பொருளீட்டுக்கடனும் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் நவீன இயந்திரம் வாயிலாக கொப்பரை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
    Next Story
    ×