search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமூர்த்தி அணை
    X
    திருமூர்த்தி அணை

    திருமூர்த்தி அணை வேகமாக நிரம்புகிறது-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் நகருக்கும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணையின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் இருந்து வரும் தண்ணீரும் அணையில் கலக்கிறது.

    கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது. அதிக நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 55.03 அடியாக உயர்ந்தது.

    பாலாறு பகுதியில் 795 கன அடியும், காண்டூர் கால்வாய் மூலம் 784 கன அடியும் நீர்வரத்து உள்ளது. பிரதான கால்வாயில் 146 கன அடியும், உடுமலை கால்வாயில் 150 கன அடியும், குடிநீருக்காக 21 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருமூர்த்தி அணை பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வருவதால் ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமூர்த்தி நகர் உதவி செயற்பொறியாளர் காஞ்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமூர்த்தி அணையின் முழு கொள்ளளவான 55அடிக்கு மேல் நீர்மட்டம் உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் வேகமாக நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனை வேகமாக நிரம்பி வரும் நிலையில் எந்த நேரத்திலும் உபரி நீர் வெளியேற்றப்படும்.

    எனவே பாலாறு கரையோரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×