search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செயற்கையாக நூல் தட்டுப்பாடு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பனியன் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

    திடீரென நூல் விலை உயர்ந்துள்ளதால் தற்போதைய ஆர்டரை பூர்த்தி செய்வதிலும் புதிய ஆர்டர்களை ஏற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட உதவியாக அக்டோபர் மாத நூல் விலையை தொடர வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இதுதொடர்பாக அனைத்து நூற்பாலை சங்கங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திடீரென நூல் விலை உயர்ந்துள்ளதால் தற்போதைய ஆர்டரை பூர்த்தி செய்வதிலும் புதிய ஆர்டர்களை ஏற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    இதேநிலை நீடித்தால்  ஆயத்த ஆடை துறையினர் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைய முடியாது. ஏற்றுமதி வர்த்தகர்களிடம் மற்ற விலை உயர்வை காரணம் காட்டி  கூடுதல் விலைபெற முடியாது.

    போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆயத்த ஆடைகளுக்கான சர்வதேச விலை குறைவாக உள்ளது. விலை உயர்ந்தால் ஆர்டர் வேறு நாடுகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதனால்  ஜவுளி மதிப்பு சங்கிலி பாதிக்கப்படுவதுடன் வேலையிழப்பும் ஏற்படும்.

    ஆயத்த ஆடை துறையின் நீண்டகால உறவை பேணி பாதுகாக்கும் வகையில் அக்டோபர் மாத நூல் விலையையே இம்மாதமும் தொடர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளிடம் இருந்து பருத்தியை கொள்முதல் செய்து இருப்பு வைக்கும் இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) சீசன் இல்லாத நேரத்தில் அதிக விலைக்கு பஞ்சு விற்கிறது. குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரியை போல்  அதிக விலைக்கு விற்கிறது.

    பஞ்சு விற்பனையில்  சிறு, குறு நிறுவனங்களை கணக்கில் எடுப்பதில்லை. இதனால்  அதிக விலைக்கு பஞ்சு வாங்கி ஆடையை அதிக விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சிறு, குறு தொழில்கள், நூல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

    இந்தியாவில் உற்பத்தியாகும் 350 லட்சம் பொதி பருத்தி பஞ்சில்  உள்நாட்டு தேவைக்கே 300 லட்சம் பொதி தேவைப்படுகிறது. இருப்பினும்  உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    குறைந்த அளவு பஞ்சு மற்றும் நூலிழையை உற்பத்தியாளருக்கு கொடுப்பதால் விலை உயர்வும் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.சி.சி.ஐ., அமைப்பு, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்த பிறகே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

    பருத்தி பஞ்சை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும். நிதித்துறை, ஜவுளித்துறை அமைச்சர்கள் தலைமையில் கூடி செயற்கை தடைகளை நீக்க ஆலோசிக்க வேண்டும்.

    செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு மற்றும் நூல் விலையை உயர்த்தும் அமைப்புகளை தண்டிக்க கடுமையாக சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×