search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    5-ந்தேதி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்கிறார் துரைமுருகன்

    முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்துவிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்ய இருக்கிறார்.
    கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ந்தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், அணையின் 3 மற்றும் 4-வது மதகைத் திறந்து, விநாடிக்கு 257 கனஅடி வீதம், 514 கனஅடி நீர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கேரளா மாநிலத்தின் இடுக்கி அணைக்குச் செல்லும்.

    அணையில் நீர் திறக்கும்போது, தமிழக அரசைச் சேர்ந்த பெரியாறு அணை செயற்பொறியாளரும், உதவிப் பொறியாளரும் உடனிருந்தனர். முல்லைப் பெரியாறு அணையை, தமிழக அரசின் அனுமதியில்லாமல், கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம்

    முல்லைப்பெரியாறு அணை முதலன்முறையாகத் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்குத் தெரிந்துதான் இது நடந்ததா, அனுமதி பெற்றுத்தான் செய்தார்களா என்று தெரியவில்லை. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போதே அவசரமாகத் திறந்துவிடப்பட்டிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பார்ட்டம் அறிவிப்பு

    முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது.

    கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

    முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகனுக்கு நினைவூட்டுகிறோம்.

    முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன்மூலம் தென் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில், குறிப்பாக கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்கு ஜெயலலிதா முன்னெடுத்த சட்ட ரீதியிலான போராட்டங்களை நினைவில் கொண்டு, அப்போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், தற்போதைய தமிழ்நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    முல்லைப் பெரியாறு அணை

    காவேரி நீர்ப்பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும், பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை தி.மு.க. அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் தி.மு.க. அரசு காட்டும் ஏனோதானோ மனநிலையையும் கண்டித்து, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    எனவே 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, அ.தி.மு.க.வின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

    துரைமுருகன் விளக்கம்

    முல்லைப்பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோலத் தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. 28-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவந்ததால், இரண்டு மதகுகளைத் திறக்க மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்தது. இது குறித்து, நிலையான வழிகாட்டுதலின்படி, கேரள அரசின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

    தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களால்தான் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன. மதகுகள் திறக்கும் நேரத்தில் கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இதுவாக இருக்க, கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்பது தவறான தகவல். உச்ச நீதிமன்ற ஆணையின்படி, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதலில் தெரிவித்த, நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அளவின்படி, தமிழக நீர்வளத்துறை அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்திவருகிறது. அணையின் இயக்கம் குறித்துத் தவறான செய்தி தெரிவித்திருப்பதில், ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.

    இருந்தாலும் முல்லை பெரியது அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்கிறார்.
    Next Story
    ×