search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் முடிவு-ஆடைகள் விலை உயர்வு 5-ந்தேதி முதல் அமல்

    அனைத்து வகை மூலப்பொருட்கள் விலை மற்றும் ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்கள் வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று ஆடைகள் தயாரிக்கின்றன. மேலும் நூல் விலை, ஜாப்ஒர்க் கட்டணம் என உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு ஆடை விலை நிர்ணயிக்கப் படுகிறது. 3 மாதம் முன்னரே ஆர்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஆடை விலை உறுதி செய்யப்படுகிறது.

    இதனால் மூலப்பொருட்கள் விலையில் ஏற்படும் திடீர் உயர்வு ஆடை உற்பத்தியாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. இந்தாண்டு நிட்டிங் கட்டணம் 20 சதவீதம், சாயக்கட்டணம் 15 சதவீதம், ரோட்டரி பிரின்டிங் கட்டணம் 20 சதவீதம், எலாஸ்டிக் கட்டணம் 15 சதவீதம், அட்டைபெட்டி விலை  கடந்த மார்ச் மாதம் 15 சதவீதம், அக்டோபரில் 20 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி பாலிபேக், தையல் நூல், பவர்டேபிள் என அனைத்து ஜாப்ஒர்க் கட்டணங்கள், ஆடை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. பனியன் தொழிலாளர் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் சரக்கு கப்பல் கட்டணமும் அபரிமிதமாக உயர்ந்துள்ளன.

    இந்நிலையில் தமிழக நூற்பாலைகள் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் நூல் விலையை கிலோவுக்கு ரூ.50 உயர்த்தியுள்ளன. ஏற்கனவே தவித்துவரும் ஆடை உற்பத்தி துறையினர் தற்போது நூல் விலை உயர்வால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், வங்கதேசம், சீனா போன்ற போட்டிநாடுகளைவிட நமது ஆடை விலை 30 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இதனால் ஆர்டர்கள் கைநழுவிப்போகின்றன. நூல் விலை ரூ.50 உயர்வு என்பது ஜீரணிக்கமுடியாததாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக உலக ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 3.8 சதவீதமாக வளர்ச்சியின்றி உள்ளது. பிரதான மூலப்பொருளான நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து ள்ளதால் ஆடை ஏற்றுமதி துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

    உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவு ஆடை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும். ஜவுளி அமைப்புகள் ஒருங்கிணைந்து  பஞ்சு விலையை கட்டுப்படுத்த போராட வேண்டும் என்றார். திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க (டிக்மா) தலைவர் பாலசுப்பிரமணியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்து வகை மூலப்பொருட்கள் விலை மற்றும் ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு ஆயத்த ஆடை விலை 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 

    இந்த விலை உயர்வு வருகிற 5-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.அனைத்து நிறுவனங்களும் வர்த்தகர்களிடம் ஆடை விலை உயர்வு கேட்டு பெற வேண்டும். இக்கட்டான நிலைகளை உணர்ந்து வர்த்தகர்கள் ஆடை விலையை உயர்த்தி வழங்க முன்வரவேண்டும்.இவ்வாறு  அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×