search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொடர் மழையால் திருப்பூரில் முடங்கும் தீபாவளி வியாபாரம் - முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    குறு சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து ஆடை ரகங்கள், பேக், கவரிங் நகைகள், குடை, பொம்மை உட்பட பல்வேறுவகை பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
    திருப்பூர்:

    தீபாவளிக்கு இன்னும் இரு நாட்களே உள்ளன. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளருக்கு போனஸ் பட்டுவாடா செய்து வருகின்றன. 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போனஸ் பட்டுவாடாவை நிறைவு செய்துள்ளன. 

    கைவசம் அதிக ஆர்டர் உள்ள நிறுவனங்கள், இன்றும், நாளையும் போனஸ் வழங்குகின்றன. பண்டிகை நெருங்குவதையடுத்து புத்தாடை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    புதுமார்க்கெட் வீதி, முனிசிபல் ஆபீஸ் வீதி, குமரன் ரோடு, காமராஜர் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், காதர்பேட்டை, பனியன் பஜார் பகுதியும் களைகட்டியுள்ளது.

    புதுமார்க்கெட் வீதி, வளர்மதி பஸ் ஸ்டாப் பகுதியில், நொய்யலாற்று பாலம்,நஞ்சப்பா பள்ளி வீதிகளில், குறு சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து ஆடை ரகங்கள், பேக், கவரிங் நகைகள், குடை, பொம்மை உட்பட பல்வேறுவகை பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் திருப்பூரில் கடந்த சில நாட்களாக மதியம், மாலை, இரவு நேரங்களில் பெய்யும் மழை காரணமாக பொதுமக்கள் முன்பு போல் இல்லாமல் குறைந்தே காணப்படுகிறது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதனிடையே தீபாவளியையொட்டி திருப்பூரில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமரன் ரோட்டில் இடையூறாக போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம், ‘சிசிடிவி’ கேமரா அமைத்துள்ளனர். மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பஸ்சில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் வகையில் ‘கிரைம் டீம்‘ போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் ரவி கூறுகையில்:  

    அதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. ஜேப்படி, நகை பறிப்பு போன்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில், மக்கள் கூடும் இடம், பஸ்சில் ‘கிரைம்‘ போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மக்கள் கூடும் இடத்தில் ‘வாட்ச் டவர்’ மூலம் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளியையொட்டி ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், டிராபிக் வார்டன் உட்பட 400 பேர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து சீர் செய்யும் பணியில் மட்டும் 120 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
    Next Story
    ×