search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வினீத் வெளியிட்ட காட்சி.
    X
    வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வினீத் வெளியிட்ட காட்சி.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23,66,211 வாக்காளர்கள்

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    திருப்பூர்:

    1.1.2022 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2022 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் மற்றும் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் ஆகியவை வெளியிடப்பட்டது. 

    அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கட்சி நிர்வாகிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் நகல்கள் மற்றும் சி.டி. வழங்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் கூறுகையில்:

    வாக்காளர் பட்டியல்

    19.3.2021 முதல் மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியல் விபரங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக பெறப்பட்ட 6591 கோரிக்கைகளின் பேரிலும் முகவரி மாற்றம் செய்ய பெறப்பட்ட 648 கோரிக்கைகளின் பேரிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வருகிற 13, 14, 27, 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2022 அன்று வெளியிடப்படுகிறது. 

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவர்கள், இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். 

    வரைவு வாக்காளர் பட்டியல்கள் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். 

    பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அப்போது மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது, வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், தனி தாசில்தார் (தேர்தல்) முருகதாஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். 
    Next Story
    ×