search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வானிலை நிலவரம் அறிய பிரத்யேக செயலி-திருப்பூர் மக்களிடம் விழிப்புணர்வு

    மின்னல், சூறாவளி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் என அனைத்து விவரங்களும் செயலியில் இடம் பெறும்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழை பாதிப்பு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய  தாலுகா வாரியாக வருவாய்த்துறையினர் மற்றும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு ஏற்கனவே, TN-SMART என்ற செயலியை பிரத்யேகமாக உருவாக்கியிருந்தது.

    இதில் மாவட்டம், தாலுகா வாரியாக அன்றைய தினம் மற்றும் அடுத்த சில நாட்களுக்கான வானிலை, மழைப்பொழிவு விவரம், வானிலை முன்னறிவிப்பு, மழையளவு, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், மீனவர்களுக்கான எச்சரிக்கை, மின்னல், சூறாவளி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் என அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

    பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை சார்ந்த விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இந்த செயலி  வடிவமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில்  வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அரசுத்துறையினர், இந்த செயலி மூலம்  வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து ஆயத்தப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த செயலியில் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்துவிட்டால் அவரவர் வசிக்கும் பகுதியின் வானிலை நிலவரம் குறித்த, குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. 

    தாலுகா வாரியாக பேரிடர் சமயத்தில் அரசுத்துறையினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள தன்னார்வ அமைப்பினர் மற்றும் விபரங்களை பதிவு செய்வதற்கான தளமும் உள்ளது.

    இத்தளத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பொதுமக்களிடம் இதுதொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×