search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    எண்ணூரில் மாவோயிஸ்ட் கைது

    ஜார்கண்ட் மாநிலத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் எண்ணூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். கட்டிட தொழிலாளிகளாகவும், ஓட்டல்களிலும் இவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதுபோன்று வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் அங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு சென்னையில் வந்து யாருக்கும் தெரியாமல் தங்கி இருப்பது வாடிக்கையாகி உள்ளது.

    அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் ஒருவன் சென்னை எண்ணூரில் கட்டிட தொழிலாளி போர்வையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவன் சுகார் கஞ்ச். 40 வயதான இவன் அந்த மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.

    இந்த நிலையில் மாவோயிஸ்ட்டான சுகார் கஞ்ச் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தலைமறைவானான். அவன் எங்கிருக்கிறான் என்பது தெரியாமல் இருந்தது.

    போலீசார் விசாரணை

    இதுதொடர்பாக ஜார்கண்ட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் சுகார் கஞ்ச் சென்னையில் எண்ணூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து ஜார்கண்ட் போலீசார் சுகார் கஞ்சின் புகைப்படத்தை அனுப்பி எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    எண்ணூர் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக சுகார் கஞ்ச் வேலை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணூர் போலீசார் புகைப்படத்தை வைத்து சுகார் கஞ்சை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதன்படி எண்ணூர் பகுதியில் தங்கியிருந்த அவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஜார்கண்ட் மாநிலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் பிடிபட்டுள்ளான்.

    அவன் மீது இங்கு எந்த வழக்குகளும் இல்லை. இதனால் ஜார்கண்ட் போலீசாரிடம் மாவோயிஸ்ட்டை ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கொலையாளி ஒருவன் பிடிபட்டான். அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அவன் சென்னைக்கு வந்து எண்ணூர் பகுதியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    அவனை மேற்குவங்க போலீசார் வந்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்ட் எண்ணூரில் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எண்ணூர் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த குற்றவாளிகள் தொடர்ச்சியாக பிடிபட்டு வருவதால் அந்த பகுதியில் வசித்து வரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    வட மாநிலத்தவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அவர்களை பற்றிய முழு தகவல்களையும் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் குற்றப்பின்னணி உடையவர்களை பிடிக்க போலீஸ் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.


    Next Story
    ×