search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருச்சி மாவட்டத்தில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய பலத்த மழை

    மாநகரில் பெய்த கனமழையால் சிங்காரதோப்பு, என். எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி ஜவுளி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.
    திருச்சி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதற்கிடையே நேற்று முதல் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும், மாலையில் தொடங்கி இரவு வரை மழை பெய்வதும் தொடர்கிறது.

    நேற்று முன்தினம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 179.90 மி.மீட்டர் மழை பதிவானது. ஜீயபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் அருகேயுள்ள ஏகிரிமங்களம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 2 வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த சூறாவளி காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள் சாலைகளில் பெயர்ந்து விழுந்து கிடந்தன.

    அதனை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து வருகிறார்கள். இதே போல் தொடர்ந்து மின் வெட்டு பிரச்சனையும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் 6 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. இந்த மழையானது திருச்சி மாநகரில் சுமார் 2 மணி நேரம் இடைவெளியின்றி நீடித்தது.

    இதனால் கண்டோன்ட்மென்ட், சாஸ்திரி நகர், சங்கிலியாண்டபுரம், பீமநகர், உறையூர், மேலபுலிவார்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு சில இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டன.

    அதிகபட்சமாக திருச்சி டவுன் பகுதியில் 48 மி.மீட்டரும், ஏர்போர்ட் பகுதியில் 34.4 மி.மீட்டர் மழையும் பதிவானது. இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    மேலணை-15, சமயபுரம்- 35.2, புள்ளம்பாடி-9.4, நந்தியாறு-6.2, கல்லணை- 31.2, லால்குடி-3.2, மணப்பாறை-1.6, துவாக்குடி-9.

    மாநகரில் பெய்த கனமழையால் சிங்காரதோப்பு, என். எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி ஜவுளி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மக்கள் பலரும் துணிகள் வாங்காமல் திரும்பி சென்றனர். அதேபோன்று தரைக்கடை வியாபாரிகள் வியாபாரத்தை நிறுத்தினர். மழையால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    திருச்சி திருவெறும்பூரில் நெல்நடவு பணிக்கு வந்த கடலூர் திட்டக்குடி கிளமங்கலத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது 60) என்பவர் இடி தாக்கி வயல் வெளியில் சுருண்டு விழுந்து இறந்தார். அவருடன் சென்ற சங்கர் (55) என்ற தொழிலாளியையும் மின்னல் தாக்கியது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×