search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பிகே சேகர்பாபு
    X
    அமைச்சர் பிகே சேகர்பாபு

    நான் தொகுதி அரசியல் செய்யவில்லை- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில்

    கோவில்களில் பாதுகாப்பு அறை அமைப்பதற்கான அரசாணை 2017-ல் வெளியாகியும், அ.தி.மு.க. அரசு 4 வருடமாக அதை அமைப்பதற்கான பணியில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
    சென்னை:

    கோடம்பாக்கம் புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

    22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர் அதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடம்பாக்கம் பரத் வாஜேஸ்வரர் கோவிலில் (திருவாலீஸ்வரம்) உலோக திருமேனி பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விலை மதிப்புமிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

    2017-ம் ஆண்டு சிலையை பாதுகாக்க 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3,087 கோவில்களில் திருமேனி பாதுகாப்பு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது இரண்டு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதம் 3085 பாதுகாப்பு அறைகள் விரைவில் அமைக்கப்படும்.

    கோவில்களை சுற்றி இருக்கும் மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தர்கள் பக்தி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

    அண்ணாமலை

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி முகநூலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நீதி மன்றத்தில் சிதம்பரம் கோவில் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு எந்த இடை யூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தொகுதி பக்கம் மட்டும் அமைச்சர் சேகர்பாபு அரசியல் செய்கிறார் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். நான் தொகுதி அரசியல் மட்டும் செய்யவில்லை. தமிழகத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன்.

    இப்போது இருக்கும் இந்த கோவில் துறைமுகம் தொகுதியை சேர்ந்தது அல்ல. எதையாவது குற்றச்சாட்டாக சொல்ல வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்படுகிறது.

    கோவில்களில் பாதுகாப்பு அறை அமைப்பதற்கான அரசாணை 2017-ல் வெளியாகியும், அ.தி.மு.க. அரசு 4 வருடமாக அதை அமைப்பதற்கான பணியில் ஈடுபடவில்லை. தற்போது நாங்கள் அந்த பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

    அறநிலையத்துறை கல்லூரிக்கு வெளிப்படை தன்மையோடு, வேண்டியவர், வேண்டாதவர் என பார்க்காமல் திறமையான பேராசிரியர்கள் நியமிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்து மேலும் மற்ற கல்லூரிகளுக்கு பேராசிரியர்களை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை சட்டப்படி மீட்டு கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இது வெளிநாட்டு விவகாரம் என்பதால் அவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுபற்றி மத்திய அரசிடம் பேசியுள்ளோம். விரைவில் சிலைகள் மீட்டுக்கொண்டு வரப்படும்.

    எவ்வளவு சிலைகள் திருடப்பட்டுள்ளன எவ்வளவு சிலைகள் எந்தெந்த அருங்காட்சியகத்தில் உள்ளன என்கின்ற கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எழிலன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    Next Story
    ×