search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமூர்த்திமலை அணையில் இறந்து கிடக்கும் மான்.
    X
    திருமூர்த்திமலை அணையில் இறந்து கிடக்கும் மான்.

    திருமூர்த்திமலை அணையில் மான் உடல் - தண்ணீர் மாசுபடும் அபாயம்

    வறட்சி காலங்களில் வனப்பகுதியில் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கிறது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது.இங்கு யானை, புலி ,செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுப்பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, மலைப்பாம்பு, உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 

    வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நம்பியுள்ளது. ஆனால் வறட்சி காலங்களில் வனப்பகுதியில் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது. 

    இதற்காக காண்டூர் கால்வாயின் குறிப்பிட்ட பகுதியில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யானைக்குட்டி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் போது கால்வாயில் தவறி விழுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த மான் ஒன்று கால்வாயில் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. 

    கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மான் மேலே வரமுடியாமல் திருமூர்த்திமலை அணைப்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டது. அந்த மானின் உடல் அழுகிய நிலையில் அணைப்பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. 

    இதனால் அணைப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள தண்ணீரும் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அணைப்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மானின் சடலத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    Next Story
    ×