search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளுக்கான இலவச சிலம்ப பயிற்சியை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தொடங்கி வைத்த காட்சி.
    X
    மாணவிகளுக்கான இலவச சிலம்ப பயிற்சியை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தொடங்கி வைத்த காட்சி.

    தற்காப்பு கலைகளை பயின்று மாணவிகள் தனித்திறனை வளர்த்து கொள்ள வேண்டும் - உடுமலை டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

    தமிழக அரசு சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது.
    உடுமலை:

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர நூலகம் எண்-2 நூலக வாசகர் வட்டம், பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலவச சிலம்பம், களரி பயிற்சிகளை அளித்து வருகிறது. 

    இதில் பங்கேற்றவர்கள் மாநில தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளனர். அரசும் சிலம்ப போட்டிகளுக்காக வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் தற்போதைய கொரானா தொற்றால் செல்போன்களை பயன்படுத்தி வரும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும் விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தவும் மாற்று ஏற்பாடாக விளையாட்டு மற்றும் பல்வேறு பயிற்சியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு உடுமலை பாபுகான் வீதியில் உள்ள அரசு மாணவிகள் தங்கும் விடுதியில் பாரதியார் நூற்றாண்டு மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து இலவச பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். அரசு மகளிர் விடுதி காப்பாளர்  சாந்தகுமாரி வரவேற்று பேசினார்.

    நூலகர் கணேசன், வாசகர் வட்ட பொருளாளர் சிவகுமார், சிலம்ப பயிற்சியாளர் மடத்துக்குளம் சூரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகள் இது போன்ற பயிற்சிகளைப் பெற்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் அரசு சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இதை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வதால் மனது ஒரு நிலை ஏற்படும். படிக்கும் மாணவிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    இதுபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து பழகி மாணவிகள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் வை. விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.  

    9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு உடுமலை பகத் சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை ஆசான் வீரமணி பயிற்சிகளை வழங்கினார்.
    Next Story
    ×