search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம்  பி.ஏ.பி. மெயின் வாய்க்கால்.
    X
    பல்லடம் பி.ஏ.பி. மெயின் வாய்க்கால்.

    பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்காவிட்டால் போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

    பல்லடம் அல்லாளபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் செல்லும் கிளை வாய்க்காலில் ஷட்டரை திறந்து, சிலர் தண்ணீர் திருடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    பல்லடம்:

    பி.ஏ.பி.,பாசனத்திட்டத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, காங்கேயம் உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. திட்டம் ஆரம்பித்த  போது ஆண்டுக்கு 2 முறை சுமார் 100 முதல் 130 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

    தற்போது ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் கிளை வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதால் கடைமடை விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் அருகே உள்ள உகாயனூர் பிரிவில் உள்ள பி.ஏ.பி.பாசன மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அல்லாளபுரம், அவரப்பாளையம், வழியாக நொச்சிபாளையம் கிராமங்களில் உள்ள கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும் வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.  

    தற்போது முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரிசைப்படி உள்ள மடை கணக்குப்படி அவற்றுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. 

    இதனிடையே பல்லடம் அல்லாளபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் செல்லும் கிளை வாய்க்காலில் ஷட்டரை திறந்து, சிலர் தண்ணீர் திருடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இந்த சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பி.ஏ.பி.பாசனத்திட்டத்தில் விவசாயம் நடைபெறுகிறது. பி.ஏ.பி.பாசனத்தண்ணீர் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. பி.ஏ.பி. வரிசைப்படி உள்ள மடை கணக்குப்படி தண்ணீர் பிரித்து விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது. 

    ஆனால் திருவள்ளுவர் நகர் பகுதி கிளை வாய்க்காலில் இரவு நேரத்தில் சிலர்  ஷட்டரை திறந்து தண்ணீரை அவர்களது பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் செல்லாமல் அவர்கள் விளைவித்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை உள்ளது. 

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும்  அவர்கள் தட்டிக்கழித்து வருகின்றனர். ஏற்கனவே ஆண்டுக்கு ஒருமுறை தான் தண்ணீர் கிடைக்கிறது. இதில் தண்ணீர் திருட்டும் நடப்பதால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டை தடுக்காவிட்டால் போராட்டத்தில் இறங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×