search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தக்காளி,வெங்காயம் விலை வீழ்ச்சியால் தவிக்கும் விவசாயிகள் - ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுமா?

    கடந்த 2 வருடங்களாகவே சிறிய, பெரிய வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து பெண்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
    திருப்பூர்:

    சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (பல்லாரி) மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.  இதனால் மற்ற காய்கறிகளை காட்டிலும் இந்த காய்கறி வகைகளுக்கு  எப்போதும் மவுசு அதிகம். அதேப்போல் காய்கறி மார்க்கெட்டுகளில் அதிகம் விற்பனையாகும் காய்கறிகள் இவைதான். அதனால்தான் என்னவோ தக்காளியும், வெங்காயமும் தங்கத்திற்கு நிகராக கருதப்படுகிறது. 

    தங்கம் விலை ஏறி இறங்குவது போல் தக்காளி, வெங்காயமும் வருடம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் நிலையும் ஏற்படுகிறது. 

    கடந்த 2 வருடங்களாகவே சிறிய, பெரிய வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து பெண்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஒரு பக்கம் விலை உயர்வு, மறு பக்கம் தட்டுப்பாடு என்று வெங்காயம் பொதுமக்களை பாடாய்படுத்தியது. 

    இதனால் சமையலில் இருந்து வெங்காயம் விலக ஆரம்பித்தது. அதற்கு பதில் முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் மற்ற காய்கறிகளை காட்டிலும் வெங்காயத்தில் சத்து அதிகம் என்பதால் பொதுமக்கள் பலர் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினர். ஒரு கிலோ ரூ.200-ஐதாண்டி விற்பனையானது. 

    அதேப்போல் தக்காளியும் ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையானது. சில நேரங்களில் மிகவும் விலை வீழ்ச்சி கண்டு கால்நடைகளுக்கு உணவாகும் அவலமும் அரங்கேறியது. 

    பெரும்பாலும்  தக்காளிதான் விலை வீழ்ச்சி ஏற்பட்டு குப்பைகளுக்கு செல்லும் .வெங்காயத்தை பொறுத்தவரை எப்போதுமே மவுசுதான். ஆனால் தற்போது வெங்காயமும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வியர்வை சிந்தி உழைத்தும் பலனில்லாததால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். 

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை பகுதிகளில்  30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடை நடந்து வருகிறது .உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் சந்தைகளுக்கு நாள் தோறும் 14 கிலோ கொண்ட 20 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்த நிலையில் கேரளா மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வது குறைந்துள்ளதால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.250 வரை விற்ற பெட்டி தற்போது 100 ரூபாயாக குறைந்துள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம், ஒரு சில பகுதிகளில் தக்காளி செடிகளில் வாடல் நோய், இலைப்புள்ளி, ஊசிப்புழு தாக்குதல்என பல்வேறு பாதிப்புகளால் மகசூலும் குறைந்துள்ளது. ஏக்கருக்கு சராசரியாக ஆயிரம் பெட்டி விளையும் நிலையில் தற்போது, 700 பெட்டியாக சரிந்துள்ளது. 

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளர் பாலதண்டபாணி கூறுகையில்,அனைத்து காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதித்து வருகின்றனர்.

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்த நிலையில் பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாத விலை நிலவுகிறது.

    நோய்த்தாக்குதல், தொழிலாளர்கள் பற்றாக்குறை, மருந்து, உரம் என கூடுதல் சாகுபடி செலவு செய்தாலும்  விலை கிடைக்காமல் நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது.மகசூலும் குறைந்து வருகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை காய் பறிக்கப்பட்டது. தற்போது மூன்று பறிப்பு கூட மேற்கொள்ள முடியவில்லை.

    வெயிலின் தாக்குதல் அதிகரித்ததால் பழங்கள் ஒரு சில நாட்களில் அழுகி விடுகிறது. விற்பனைக்கு வரும் தக்காளியில் பெரும்பகுதி ரோடுகளில் வீணாக கொட்டப்படும் சம்பவமும் நடந்து வருகிறது. கடந்த மாதமாக தக்காளி, வெங்காயம், கத்தரி, பீர்க்கன், பாகற்காய், பூசணி என தோட்டக்கலைப்பயிர்கள் தொடர் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 

    விரிவாக ஆய்வு செய்து தேவையான சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டும் என்றார்.

    வெங்காய சாகுபடி விவசாயிகள் கூறுகையில், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர்  பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயம் சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

    ஒரு ஏக்கர் வெங்காய சாகுபடிக்கு ரூ.80 ஆயிரம் செலவாகிறது. ஆனால் தற்போது வெங்காயம் கிலோ ரூ.8- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    தற்போதைய விலையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் விவசாயிக்கு ரூ. 40 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது.விலை குறைவாக இருப்பதால் சாகுபடிக்காக விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமலும்  அடுத்த சாகுபடிக்கு தேவையான விதை, உரம் மற்றும் இடுபொருள்கள் வாங்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

    வெங்காய விலை கடந்த ஆண்டில் அபரிமிதமாக உயர்ந்தபோது  பொதுமக்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் வெங்காய இறக்குமதிக்கு அனுமதி அளித்தது. அதேபோல தற்போது வெங்காய விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

    வெங்காய விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல மாநில அரசு வெங்காயத்தை கூட்டுறவுத் துறை மூலம் குறைந்தபட்ச விலையாக ரூ. 40-க்கு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.
    Next Story
    ×