search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ராதாபுரத்தில் வீடு இடிந்து சிறுவன் பலி: கல்குவாரியில் வெடி வைத்த தொழிலாளி மீது வழக்கு

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வீடு இடிந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்த தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்தி குளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    கூடங்குளத்தை சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமான இந்த கல்குவாரியை குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறது.

    இந்நிலையில் நேற்று கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் பாறைகளை உடைக்க வெடி வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட அதிர்வில் அந்த பகுதியில் அதிர்வு ஏற்பட்டது.

    இந்த அதிர்வால் அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது28) என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த முருகனின் 3 வயது மகன் ஆகாஷ் கை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடி காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் இறந்து விட்டான் என்று அவனது உறவினர்களும், கிராமத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

    அதுவரை ஆகாஷ் உடலை எடுக்க விடமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் கல்குவாரி நிர்வாகம் தரப்பில் ஆகாஷின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது .

    பின்னர் ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்று உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் போலீசார் கல்குவாரியில் வெடி வைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×