search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்

    கள்ளக்குறிச்சி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12½ லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 3,773 பதவிகளுக்கு வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் நடராஜன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கொண்ட பறக்கும் படையினர் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் அம்மன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தியபோது, அதில் கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காரில் வந்த சேலத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், வெள்ளிப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் எடுத்து வரப்பட்ட ரூ.12½ லட்சம் மதிப்பிலான 19 கிலோ வெள்ளிப்பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உடனிருந்தார்.

    இதேபோல் தனி தாசில்தார் நடராஜன் தலைமையிலான பறக்கும்படையினர் நேற்று காலை கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் ராயபுரத்தை சேர்ந்த கண்ணுசாமி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.50 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலருமான அந்தோணிராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் கே.கே. ரோடு பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் மனோஜ் (வயது 24) என்பவர், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.56 ஆயிரத்து 550-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வியிடம் ஒப்படைத்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் நாராயணசாமி உடனிருந்தார்.
    Next Story
    ×