search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரூ.1.98 கோடி முறைகேடு புகார்: குரும்பூர் தொடக்க வேளாண் சங்க நிர்வாகிகள் 3 பேருக்கு ‘நோட்டீஸ்’

    குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைக்காமல் நகை கடன் வழங்கி உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.

    குரும்பூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு நகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி அரசு நகைகள் மீதான கடன்களை அவ்வப்போது தள்ளுபடி செய்து வருகிறது.

    இதனை பயன்படுத்தி கடந்த ஆட்சி காலத்தின்போது ஏராளமான வேளாண் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைக்காமல் நகை கடன் வழங்கி உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து சமீபத்தில் அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 500 பொட்டலங்களில் நகைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் சுமார் 261 பொட்டலங்களில் நகைகள் ஏதும் இல்லை.

    கடன் தள்ளுபடி செய்யும் நோக்கில் முறைகேடாக அவை வெறும் பொட்டலங்களாக வைக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அவற்றின் மொத்த தொகை ரூ.1 கோடியே 98 லட்சம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த முறைகேட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது சுட்டிக்காட்டினார். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவாக விசாரணை நடத்தப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த முறைகேடு தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர். முறைகேடு உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×