search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலையில் குடிமகன்களால் பாழாகும் குளங்கள் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    உடுமலை நகரை ஒட்டி அமைந்துள்ள ஒட்டுக்குளம் மற்றும் கிராமங்களின் அருகிலுள்ள பிற குளங்களில் மாலை இரவு நேரங்களில் குடிமகன்கள் தஞ்சமடைவது வழக்கமாகியுள்ளது.
    உடுமலை:

    உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட தினைக்குளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் வாயிலாக நேரடியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.

    பல மாதங்கள் நீர் நிரம்பி காணப்படும் குளங்களுக்கு உள்நாட்டில் இடம் பெயரும் தன்மையுள்ள நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. இவ்வாறு முக்கிய நீராதாரமாகவும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தும் காணப்படும் குளங்களின் கரைகள் தற்போது திறந்தவெளி பாராக மாற்றப்பட்டுள்ளன.

    உடுமலை நகரை ஒட்டி அமைந்துள்ள ஒட்டுக்குளம் மற்றும் கிராமங்களின் அருகிலுள்ள பிற குளங்களில் மாலை இரவு நேரங்களில் குடிமகன்கள் தஞ்சமடைவது வழக்கமாகியுள்ளது. 

    குறிப்பாக குளங்களில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர் பகுதியில் அமர்ந்து குடிப்பவர்கள், காலி பாட்டில்களை அப்பகுதியிலேயே வீசி எறிகின்றனர். இதனால் ஷட்டர்களில்  பாட்டில்கள் சிக்கிக்கொள்வதுடன் உடைத்து வீசப்படும் கண்ணாடி துகள்களால் விவசாயிகள் காயமடைகின்றனர். 

    இரவு நேரங்களில் குளத்தின் கரை வழியாக கிராமங்களுக்கு செல்பவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. பறவையினங்கள் மாலை நேரத்தில், குளங்களுக்கும் திரும்பும் போது குடிமகன்கள் எழுப்பும் கூச்சல், தீ வைத்து எழும் புகையால் பாதிக்கப்படுகின்றன.

    இத்தகைய சமூக விரோத செயல்களால் காலி பாட்டில்கள் குவிவதுடன் பிளாஸ்டிக் கழிவுகள், பொருட்கள் அப்பகுதி முழுவதும் பரவி சுற்றுச்சூழல் கடுமையாகபாதித்து வருகிறது. 

    நீராதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், பொதுப்பணித்துறை, போலீசார் இணைந்து தொடர் ரோந்து சென்றால் இத்தகைய சமூக விரோத செயல்களை தடுக்க முடியும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×