search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர் ரஞ்சித்குமார்.
    X
    தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர் ரஞ்சித்குமார்.

    திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்கில் தற்கொலை

    திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி. பி.எஸ். பயிற்சி மருத்துவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தோல்வி பயத்தில் ஆண்டு தோறும் பல மாணவ-மாணவிகள் தங்களின் விலை மதிக்க முடியாத உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டிலும் அரியலூர், சேலம் மேட்டூர், காட்பாடி ஆகிய இடங்களில் 2 மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான அரசின் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி. பி.எஸ். பயிற்சி மருத்துவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னமண்டவாடி சின்னய்யா கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் நாச்சி முத்து. ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 24).

    இவர் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தார். தற்போது பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் ரஞ்சித் குமார் தங்கியிருந்த அறையின் கதவு நேற்று மதியம் முதல் திறக்கப்படவில்லை. சக மாணவர்கள் கதவை தட் டியும் உள்ளே இருந்து எந்த விதமான பதிலும் இல்லை.

    வெகுநேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த கோகுல் என்ற சக மாணவர் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த அறையின் பின் பக்க ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது ரஞ்சித்குமார் நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

    இதையடுத்து சக மாணவர்கள் அறைக்கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை மீட்டனர். பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழ கன் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி அறிந்த மாணவனின் பெற்றோர் திருச்சிக்கு விரைந்து வந்தனர். மகனின் உடலை அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மருத்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. காதல் விவகாரத்தில் சிக்கி தற்கொலை செய்தாரா? அல்லது மன அழுத்தத்தில் துயர முடிவை எடுத்தாரா? என பல கோணங்களில் விசாரிக்கின்றனர். ரஞ்சித் குமாரின் படிப்பு காலம் வருகிற 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதற்காக அவர் தயாராகி வந்துள்ளார். இதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ரஞ்சித்குமார் தற்கொலை செய்திருப்பாரா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

    நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்யும் நிலையில் மருத்துவ மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் மருத்துவத்துறையினரை அதிர வைத்துள்ளது.

    Next Story
    ×