search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி காரணமாக பொருட்கள் வாங்க திருப்பூர் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்,
    X
    விநாயகர் சதுர்த்தி காரணமாக பொருட்கள் வாங்க திருப்பூர் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்,

    பூ, பூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

    பூ, பழ மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது.
    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்திவிழா நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. 

    அதன்படி தனிநபர்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். 

    தாராபுரம் ரோடு, பல்லடம், காங்கயம் சாலைகளில் சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் அனைவரையும் கவரும் வகையில் வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட கடுமையான தடை நிலவுவதால் பொதுமக்கள் சிறிய அளவிலான சிலைகளை வீடுகளுக்கு வாங்கி சென்றனர். இதனால் சிறிய அளவிலான சிலைகள் அதிகம் விற்பனையானது. 

    மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்கு தேவையான பூக்கள், பழங்கள், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது. பூ, பழ மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. 

    இதனால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்தது. விநாயகருக்கு இஷ்டமாக உள்ள அருகம்புல் கட்டு ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.  

    கூட்டம் அதிகமாக இருப்பதால் தொற்று நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×