search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமராவதி அணை நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை  படத்தில் காணலாம்.
    X
    அமராவதி அணை நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    சராசரியை விட கூடுதலாக மழை பெய்ததால் நிரம்பி வழியும் அமராவதி, பி.ஏ.பி.,திட்ட அணைகள்-நிலத்தடி நீர்மட்டமும் உயர்வு

    அமராவதி அணையில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நிலப்பகுதிகளிலும் கூடுதல் மழை கிடைத்தது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில்  விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசனம், இறவை மற்றும் மானாவாரி பாசனத்தில் தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 618.20 மி.மீ., ஆகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழை சராசரி அளவு154.80 மில்லி  மீட்டராக உள்ளது. நடப்பாண்டு இயல்பை விட அதிகரித்து அமராவதி மற்றும் பி.ஏ.பி., திட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து அணைகள் நிரம்பின.

    அமராவதி அணையில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நிலப்பகுதிகளிலும் கூடுதல் மழை கிடைத்தது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் ஜூன் மாதம் சராசரி மழையளவு, 22 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, ஜூன் மாதம் உடுமலை பகுதிகளில் 5 மழை நாட்களில் 23.20 மி.மீ., மழை கிடைத்துள்ளது.

    அமராவதி அணைப்பகுதியில் 4 மழை நாட்கள் 33 மி.மீ., மழையும், திருமூர்த்தி அணைப்பகுதியில், 7 மழை நாட்கள் 47 மி.மீ., மழையும், மடத்துக்குளத்தில், 2  நாட்கள் 30 மி.மீ., மழை கிடைத்துள்ளது.

    அதே போல் ஜூலை மாத சராசரி மழையளவு 27.10 மி.மீ., ஆகும். நடப்பாண்டு  உடுமலையில் 7மழை நாட்களில் 34.20 மி.மீ., பெய்துள்ளது. அமராவதி அணைப்பகுதியில் 12 நாட்கள் மழை பெய்து 31 மி.மீ., பதிவாகியுள்ளது.

    திருமூர்த்தி அணைப்பகுதியில் 15 நாட்கள் 60 மி.மீ., மடத்துக்குளத்தில் 4 நாட்கள் 24 மி.மீ., பெய்துள்ளது. ஆகஸ்டு மாத சராசரி மழையளவு 31.70 மி.மீ., ஆகும். நடப்பாண்டு உடுமலையில், 4 நாட்கள் மழை பெய்து 26.60 மி.மீ., பதிவாகியுள்ளது. அமராவதியில் 11 நாட்களில் 45 மி.மீ., திருமூர்த்தியில் 6 நாட்களில் 20 மி.மீ., பெய்துள்ளது.

    மடத்துக்குளம் பகுதிகளில் ஒரே நாளில் அதி கன மழை என 4 நாட்களில் 114 மி.மீ., பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காலத்தில்  கடந்த மூன்று மாதத்தில் உடுமலையில், 84 மி.மீ.,மடத்துக்குளத்தில்  168 மி.மீ.,அமராவதி அணை, 109 மி.மீ.,  திருமூர்த்தி அணை 127 மி.மீ., என பல மடங்கு கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதனால் பாசன அணைகள் மட்டுமன்றி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. 

    ஓடைகள், தடுப்பணைகள், குளம், குட்டைகளும் நிரம்பியுள்ளதால், நடப்பாண்டு பருவ மழை விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் இயல்பான மழையளவு 74 மி.மீ., ஆக உள்ள நிலையில் இம்மாதமும் தொடக்கம் முதலே, தொடர்ந்து மிதமானது முதல் கன மழை வரை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
    Next Story
    ×