search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து விவசாயி ஈஸ்வரன், தனது குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து விவசாயி ஈஸ்வரன், தனது குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    வேளாண் விரிவாக்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி

    கடமலைக்குண்டு அருகே வேளாண் விரிவாக்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடமலைக்குண்டு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை இடையே தேனி பிரதான சாலையின் ஓரமாக ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தென்பழனி காலனியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்ற விவசாயி, விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதைத்தொடர்ந்து மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், கடமலைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் பாலகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று வேளாண் விரிவாக்க மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அளவீடு செய்து கற்கள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நேற்று சென்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடமலைக்குண்டு போலீசார் பாதுகாப்பு பணிக்காக உடன் வந்தனர்.

    அப்போது குடும்பத்துடன் அங்கு வந்த விவசாயி ஈஸ்வரன், நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவர், தனது மகன் ராமன், மனைவி, தாய் என குடும்பத்தினருடன் பொக்லைன் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    அப்போது போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஈஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் பணிகளை கைவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஈஸ்வரன் மற்றும் அவரது மகன் ராமன் ஆகியோர் மீது கிராம நிர்வாக அலுவலர் பாலகுமார், கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×