search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் ஐவர் பாணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.
    X
    ஒகேனக்கல் ஐவர் பாணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    பென்னாகரம்:

    கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக-கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாடு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி அணையில் இருந்து 5100 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் 14,600 கன அடி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனிடையே சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வராத வகையில் மடம் சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



    Next Story
    ×