search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமூர்த்தி அணை
    X
    திருமூர்த்தி அணை

    திருமூர்த்தி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

    கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
    உடுமலை:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதற்காக பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தரப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் உருவாகும் காட்டாறுகள், பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாகும். 

    அதை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

    இதனால் அணைகளின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து  காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. 

    அதைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதற்குண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 3-ந் தேதி அணையில் இருந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால் ஒரு சில மணித்துளிகளில் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அடைத்து விட்டனர். 

    இதனால் சாகுபடி பணிகளில் ஈடுபடவிருந்த விவசாயிகள் பெருத்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். மேலும் அரசு உத்தரவின்படி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த சூழலில் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொருத்து நேற்று முதல் ஒரு சுற்றுக்கு 21 நாட்கள் வீதம் 5 சுற்றுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

    இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோன்று பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தளி வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×