search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி.
    X
    காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி.

    வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்த கொடூரம்

    வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்தது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர் பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வி.ஏ.ஓ.வாக கலைச்செல்வியும், கிராம நிர்வாக உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த அலுவலகத்திற்கு ஒற்றர்பாளையம் மற்றும் கோபி ராசிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆவணங்கள் சரிபார்ப்பு உள்பட பல்வேறு பணிகளுக்காக வருவது வழக்கம்.

    நேற்று காலை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வி.ஏ.ஓ. கலைச்செல்வி மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது கோபிராசிபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்ற விவசாயி தனது சொத்து ஆவணங்களை சரிபார்ப்பதற்காக அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் வி.ஏ.ஓ. கலைச்செல்வியை சந்தித்து தனது சொத்து ஆவணங்களை சரிபார்க்க கொடுத்தார். அதனை சரிபார்த்த வி.ஏ.ஓ., ஆவணங்கள் சரியாக இல்லை. எனவே சரியான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறினார்.

    ஆனால் அதற்கு கோபிநாத், தான் உரிய ஆவணங்களை தான் வைத்துள்ளேன். சரி பார்த்து சொல்லுங்கள் என கூறினார். அதற்கு வி.ஏ.ஓ. மீண்டும் இது சரியான ஆவணம் இல்லை. அதனால் நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்லலாம் என கூறினார். இதனால் கோபம் அடைந்த கோபிநாத், கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    இதை அங்கு பணியில் இருந்த கிராம உதவியாளரான முத்துசாமி, ஒரு உயர் அதிகாரியை இப்படி தகாத வார்த்தைகளால் திட்டுவது சரியல்ல. அவர்கள் சொல்லும் சரியான ஆவணங்களை நீங்கள் எடுத்து வாருங்கள் என கோபிநாத்திடம் கூறினார்.

    இதை கேட்டதும் கோபிநாத் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று, நீ என்ன தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து பேசுவாய். உனக்கு அவ்வளவு தைரியம் வந்து விட்டதா. நான் நினைத்தால் இப்போதே இந்த வேலையில் இருந்து உன்னை தூக்கி விட முடியும். இந்த ஊரிலும் நீ வாழ முடியாது என மிரட்டும் தொனியில் பேசினார்.

    மேலும் நீ இந்த ஊரிலும், வேலையிலும் நீடிக்க வேண்டும் என்றால் என்னிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உன்னை சும்மா விடமாட்டேன் என மிரட்டியுள்ளார். இதனால் முத்துசாமி எதுவும் பேச முடியாமல் தயங்கி கொண்டே நின்றிருந்தார். தொடர்ந்து கோபிநாத், இப்போது நீ என் காலில் விழுகிறாயா? இல்லை உன்னை என்ன செய்கிறேன் பார் என்றார்.

    காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி.

    இதனால் பயந்து போன முத்துசாமியும் வேறு வழியின்றி அலுவலகத்தில் உள்ள நாற்காலி மீது அமர்ந்திருந்த கோபிநாத்தின் காலில் விழுந்தார். இதை பார்த்ததும் வி.ஏ.ஓ. கலைச்செல்வி மற்றும் ஊழியர்கள் சத்தம்போட்டு அவரை எழுந்து வர செய்தனர். ஆனால் முத்துசாமி மீண்டும், மீண்டும் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். வி.ஏ.ஓ. அவரை தடுத்து நிறுத்தி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டாம் என தடுத்தார். ஆனால் கோபிநாத், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கட்டும் என்றார்.

    இதனை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    முத்துசாமி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அவரை கோபிநாத் சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், காலில் விழ வைத்த சம்பவம் தற்போது கோவையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும், அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார். மேலும் ஆர்.டி.ஓ. குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை வந்த பின்னர் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.


    Next Story
    ×