search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவரை சாகுபடியில் உடுமலை விவசாயிகள் ஆர்வம்

    அவரையில் பட்டை அவரை, குட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிவப்பு, நெட்டை சிவப்பு, மூக்குத்தி அவரை உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளது. உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    உடுமலை:

    இங்கு தக்காளி, சின்ன வெங்காயம், பீட்ரூட் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் அவரை உள்ளிட்ட நாட்டுக் காய்கறிகளுக்கு பெரும்பாலான சீசனில் நல்ல விலை கிடைத்து வருவதால் அவரை சாகுபடியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    அவரையில் பட்டை அவரை, குட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிவப்பு, நெட்டை சிவப்பு, மூக்குத்தி அவரை உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளது. ஆனாலும் தரையில் வளரக்கூடிய குற்று அவரை அல்லது செடி அவரை, பந்தலில் வளரக்கூடிய பந்தல் அவரை அல்லது கொடி அவரை என்று பொதுவாக இரண்டு வகைப்படுத்தலாம்.

    பந்தல் அவரைக்கு ஆரம்ப கட்டங்களில் அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது. அத்துடன் ஒருமுறை பந்தல் அமைத்துவிட்டால் விருப்பம் போல பயிர்களை மாற்றி மாற்றி சாகுபடி செய்ய முடிவதில்லை. மீண்டும் மீண்டும் பந்தல் காய்கறிகளையே பயிரிட்டாக வேண்டிய சூழல் உள்ளது.

    இதனால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் செடி அவரையே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். 

    ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.விதைகளை ரைசோபியம் நுண்ணுயிர் உரம் மற்றும் அரிசிக்கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்தபின் நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். 

    இவ்வாறு விதை நேர்த்தி செய்வதன் மூலம் மகசூல் அதிகரிப்பதுடன், நோய்த்தாக்குதலும் குறையும். விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், 3ம் நாள் உயிர்த் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மேலும் அடியுரமாக ஏக்கருக்கு தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, தொழு உரம் 5 டன் இடவேண்டும். 

    அவரையில் சாறு உறிஞ்சும் அசுவினி முதலான பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும். மேலும் காய்ப்புழுக்கள் பாதிப்பு, காய் அழுகல், வேர் அழுகல், துரு நோய், கோலப்பூச்சி தாக்குதல், சாம்பல் நோய் போன்றவை ஏற்படக்கூடும். 

    இதற்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அவசியமாகும். இவ்வாறு சரியான முறையில் பராமரித்தால் 120 நாட்களில் ஏக்கருக்கு 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×