search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மக்கள்தொகைக்கு ஏற்ப தூய்மைப்பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்

    பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஊராட்சிகளில் தூய்மைப்பணி தொய்வடைந்துள்ளது.
    உடுமலை :

    உடுமலை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் தற்போது பணிபுரியும்  தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லாமல் குறைந்தே காணப்படுகிறது. இப்பணியாளர்கள் பேரிடர் காலங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்வது, வீடுகள்தோறும் குப்பையை சேகரம் செய்தல், வீதிகளில் சேரும் குப்பையை அகற்றி சுத்தம் செய்தல், சந்தை என பொது இடங்களில் சேகரமாகும் குப்பைக்கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொது சுகாதாரத்தை பேணுவதில், முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால்  பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, ஊராட்சிகளில் தூய்மைப்பணி தொய்வடைந்துள்ளது. தற்போது உள்ள பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமையால் பரிதவிக்கின்றனர். இது குறித்து ஊராட்சித்தலைவர்கள் கூறியதாவது:-

    கடந்த 2013ம் ஆண்டிற்கு பின் புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தவிர ஓய்வு பெற்ற தூய்மைப்பணியாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் தூய்மைப்பணி பாதிப்பு அடைந்துள்ளது.இதேபோல் கழிவுநீர் கால்வாயைச்சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்  தூய்மைக்காவலர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

    கடந்த  2011ல் மக்கள் தொகை மற்றும் வீடுகளின் கணக்கெடுப்புப்படி அவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தவிர மாதம்தோறும்,  தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.4,120 தூய்மைக்காவலர்களுக்கு ரூ.3,600  மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதால் பலரும் தூய்மைப்பணி மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

    அதற்கு மாறாக தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த பணிக்கு செல்ல முற்படுகின்றனர். எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்கள் நியமிக்கவும் சம்பளத்தை உயர்த்தி வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×