search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஜோலார்பேட்டையில் பெண் இன்ஸ்பெக்டரிடம் செயின் பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையன் கைவரிசை

    ஜோலார்பேட்டை அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து பைக்கில் வந்த கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன கம்மியம்பட்டு தாசரிவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா (வயது47). திருப்பத்தூர் கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவருடைய கணவர் சம்பத் சின்னகம்மியம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    நேற்று இன்ஸ்பெக்டர் புனிதா சாதாரண உடையில் பணிக்கு சென்றார். இரவு 10.45 மணிக்கு அலுவலக பணிகளை முடித்துக்கொண்டு அவரது பைக்கில் ஜோலார்பேட்டை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சின்னகம்மியம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் சென்றபோது வாலிபர் ஒருவர் மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்தார்.

    திடீரென்று அவர் இன்ஸ்பெக்டர் பைக்கை முந்தி சென்று விட்டு மீண்டும் எதிர்திசையில் வேகமாக வந்தார்.

    இன்ஸ்பெக்டர் மீது மோதுவது போல வந்த வாலிபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.

    இரவு நேரம் என்பதால் செய்வதறியாமல் தவித்த இன்ஸ்பெக்டர் புனிதா நேரடியாக வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபோன்ற சம்பங்களை தடுக்க இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    Next Story
    ×