search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்ஜ் பொன்னையா
    X
    ஜார்ஜ் பொன்னையா

    சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

    பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், இந்து மத கடவுள்களையும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்களையும் அவதூறாக பேசினார். மேலும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. பற்றியும் அவதூறு கருத்துக்களைதெரிவித்தார்.

    அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவரது பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர், இந்து அமைப்பினர் மற்றும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குழித்துறை மறை மாவட்ட ஆயரும் கண்டனம் தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்தில் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக பாரதிய ஜனதாவினர் உருவப்பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்தப் போவதாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர்.

    அது மட்டுமின்றி பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்பட மேலும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா உள்பட 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநவ், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் தக்கலையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர்.

    ஜார்ஜ் பொன்னையா

    இந்த நிலையில் மதுரை  சிலைமான் போலீசார் கருப்பாயூரணி பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகங்கையில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலீசாரால் தேடப்படும் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருமங்கலம் அருகே உள்ள  கள்ளிக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை  நடத்தினார்கள். பின்னர் அவர் கோவில்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீசார் ஜார்ஜ் பொன்னையாவை குமரி மாவட்டத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இன்று மாலைக்குள் அவர், அருமனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பங்கு தந்தை ஜார்ஜ பொன்னையாவிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி. மற்றும் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர். அதன் பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
    Next Story
    ×